

சென்னை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் வழங்கும் பணி நாளை முதல் தொடங்க உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (மார்ச் 24) வெளியிட்ட செய்தி வெளியீடு:
"இந்திய தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல்-2021-ஐ முன்னிட்டு, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலன் கருதி இந்த தேர்தலில் தபால் வாக்குகள் மூலம் வாக்களிக்க வழிவகை செய்துள்ளது.
அதன்படி, சென்னை மாவட்டத்தை உள்ளடக்கிய 16 சட்டப்பேரவை தொகுதிகளில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்க ஏதுவாக படிவம் 12D வழங்கப்பட்டு, அவற்றில் 7,300 நபர்களிடமிருந்து சுயவிருப்பத்தின் பேரில் தபால் வாக்குகள் சீட்டு கோரி பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்டுள்ளன. இந்தப் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் பெறப்பட்ட நபர்களுக்கு தபால் வாக்குகள் வழங்கும் பணிகள் வருகின்ற 25.03.2021 (நாளை) அன்று தொடங்கி மார்ச் 31 வரை நடைபெறவுள்ளது.
வாக்குப்பதிவு நாளான 06.04.2021 அன்று வாக்குச்சாவடிகளுக்கு நேரடியாக வந்து வாக்களிக்க இயலாது என்று சுயவிருப்பத்தின் பேரில் தபால் வாக்குச்சீட்டு கோரிய மேற்குறிப்பிட்ட நபர்களுக்கு தபால் வாக்குகளை வழங்க 3,820 வாக்குச்சாவடி நிலைய அலுவலர்கள் மற்றும் 70 வாக்குப்பதிவு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்களில் வாக்குப்பதிவு அலுவலர்-1, வாக்குப்பதிவு அலுவலர்-2, நுண் பார்வையாளர், காவலர் மற்றும் வீடியோ ஒளிப்பதிவாளர் இடம் பெற்றிருப்பார்கள்.
இந்த வாக்குப்பதிவு குழு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலரும் மாநகராட்சி ஆணையருமான கோ.பிரகாஷ் தலைமையில் மத்திய தேர்தல் பொது பார்வையாளர்கள் முன்னிலையில் இன்று ரிப்பன் மாளிகையில் உள்ள அம்மா மாளிகையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் பிரகாஷ் தெரிவித்ததாவது:
'தபால் வாக்குப்பதிவு பணிகளில் ஈடுபடும் வாக்குப்பதிவு அலுவலர்கள் குழுவானது சம்பந்தப்பட்ட தபால் வாக்கு செலுத்த உள்ள வாக்காளரின் முகவரிக்கு வருகை புரியும் தேதி மற்றும் நேரம் வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பப்படும். கைபேசி இல்லாத வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலைய அலுவலர் மூலமாக தகவல் தெரிவிக்கப்படும்.
மேற்படி வாக்குச்சாவடி அலுவலர் குழு தினமும் செல்லவுள்ள பகுதி மற்றும் தபால் வாக்குகள் அளிக்க உள்ளவர்கள் விவரங்கள் அத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுக்கு தெரியப்படுத்தப்படும். மேலும், தேர்தல் நடத்தும் அலுவலர் போட்டியிடும் வேட்பாளர்களுடன் கூட்டம் நடத்தும்பொழுது தபால் வாக்கு அளிக்க உள்ள நபர்களின் விவரங்களை வழங்குவார்.
வீடுகளுக்கு நேரடியாக சென்று வாக்காளர்களால் பூர்த்தி செய்து வழங்கப்பட்ட படிவம் 12D-ல் உள்ள விவரங்களின்படி வாக்காளரின் அடையாள விவரங்களை உறுதி செய்தபின் தபால் வாக்குச்சீட்டை வழங்குவார்கள். அவ்வாறு வாக்குச்சீட்டினை வழங்கும்போது வாக்காளரின் பெயர், அடையாள ஆவணங்களின் விவரம் ஆகியவற்றை பதிவேட்டில் பதிவு செய்து வாக்களரின் கையொப்பம் அல்லது கட்டைவிரல் குறியினை பெறவேண்டும்.
பின்னர், வாக்காளருக்கு தபால் வாக்குப்பதிவு செய்யும் முறையினை தெளிவாக அலுவலர்கள் விளக்க வேண்டும். மேலும், வாக்காளர் தன்னுடைய வாக்கினை பதிவு செய்யும் போது அவர் தன் சுய விருப்பப்படி வாக்களிப்பதையும், வாக்களிப்பதின் ரகசிய தன்மையினை பேணுதல் ஆகியவற்றை அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும். மேலும், ஒரு வாக்காளர் பார்வையின்மை அல்லது வேறு ஏதேனும் உடல்நல குறைபாட்டின் காரணமாக வாக்களிக்க முடியாத நிலை இருந்தால் ஒரு நபரின் உதவி பெற்று வாக்களிக்க அனுமதிக்கலாம்.
வாக்காளர் தன்னுடைய தபால் வாக்கினை பதிவு செய்த பின்னர் தன்னுடைய தபால் வாக்குச்சீட்டினை முறையாக மூடி அலுவலர்களால் கொண்டு வரப்பட்ட சீல் வைக்கப்பட்ட பெட்டகத்தில் செலுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பெட்டியில் பெறப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகளின் விவரங்களை பதிவேட்டில் பதிவு செய்து, அதனை அந்நாளின் முடிவில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் இதற்கென தனியாக உள்ள சீல் வைக்கப்பட்ட பெட்டியில் உரிய பதிவேட்டில் தேதி குறிப்பிட்டு பாதுகாப்பாக வைக்க வேண்டும். தினமும் பெறப்படும் தபால் வாக்குகள் விவரம் இணைய வழியாக தலைமை தேர்தல் அலுவலருக்கு அனுப்பி வைக்கப்படும்.
எனவே, 80 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் இந்திய தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள இந்தச் சிறப்பான வாய்ப்பினை பயன்படுத்தி தபால் வாக்களித்து தங்களின் ஜனநாயக கடமையினை நிறைவேற்ற வேண்டும்'.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
பின்னர், சென்னை மாவட்டத்தில் 80 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் அளிக்க நியமிக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு குழுவிற்கு தேவையான வாக்குப்பதிவு பொருட்களை அவர் இன்று வழங்கினார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.