

விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிடும் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு இன்று கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தொகுதியில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா அமமுக கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். கடந்த 18-ம் தேதி அவர் வேட்புமனுத் தாக்கல் செய்த நிலையில் 19-ம் தேதி அவரது சகோதரர் சுதீஷுக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து சுதீஷ் சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்குச் சென்றார்.
இந்த நிலையில் அவருடன் இருந்த பிரேமலதா உள்ளிட்ட சிலருக்கும் கரோனா தொற்று இருக்கலாம் என சுகாதாரத் துறையினர் அச்சம் தெரிவித்தனர். மேலும் பிரேமலதாவைக் கரோனா பரிசோதனை செய்துகொள்ளும்படி சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணனும் கேட்டுக் கொண்டிருந்தார்.
இருப்பினும் பிரேமலதா தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்று விருத்தாசலம் நகரப் பகுதியில் அவர் பிரச்சாரம் மேற்கொண்டபோது, அங்கு வந்த விருத்தாசலம் சுகாதாரத்துறை ஆய்வாளர், கரோனா பரிசோதனை மேற்கொள்ள ஒத்துழைக்கவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
ஆனால் அதற்கு முதலில் மறுப்புத் தெரிவித்த பிரேமலதா, பின்னர் பரிசோதனை செய்துகொள்ள முன்வந்தார். இதையடுத்து அவர் தங்கியிருக்கும் தனியார் பள்ளி வளாகத்திற்குச் சென்ற சுகாதாரத் துறையினர் பிரேமலதாவிடம் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.