

விவசாயிகளின் பிரச்சினைகளைக் குறித்துக் கவலைப்படாத பிரதமர் மோடி, அம்பானி, அதானி, அனில் அகர்வால் ஆகியோருக்காக ஆட்சி நடத்தி வருவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, மக்கள் நீதி மய்யம் தலைமையில் ஓர் அணி, அமமுக தலைமையில் ஓர் அணி போட்டியிட, நாம் தமிழர் கட்சி மட்டும் தனித்துக் களம் காண்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, கொமதேக, மமக உள்ளிட்ட கட்சிகள் போட்டியிடுகின்றன.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மதிமுக வேட்பாளர் ரகு ராமனை ஆதரித்து வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசும்போது, ''வைகோ இந்தத் தவறு செய்தார், இன்னார் இடத்திலே காசு கேட்டார் என்று எவரும் சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நேர்மையான அரசியலை நடத்தி இருக்கிறேன்.
அதனால் உங்களிடம் உரிமையோடு வாக்குக் கேட்கிறேன். வேளாண் சட்டங்களை எதிர்த்து லட்சக்கணக்கான விவசாயிகள், கொளுத்தும் வெயிலில், கொட்டுகின்ற பனியில், வாட்டி வதைக்கும் குளிரில் நூற்றுக்கும் மேற்பட்ட நாட்கள் இருந்து கஷ்டப்படுகிறார்கள். ஆனால் பிரதமர் அதைப் பற்றிக் கவலைப்பட்டாரா?
அம்பானி, அதானி, இங்கே ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வருகின்ற அனில் அகர்வால் ஆகியோருக்காகத் தான் பிரதமர் மோடி ஆட்சி நடத்தி வருகிறார்'' என்று வைகோ குற்றம் சாட்டினார்.