

ராஜபக்சவை காப்பாற்றுவதற்காக ஐநா மனித உரிமை கவுன்சிலில் இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்கு செலுத்தவில்லை என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் மக்களவை உறுப்பினருமான தொல்.திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
இலங்கைக்கு எதிரான ஐநா மனித உரிமை கவுன்சிலின் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்காமல், இந்தியா வெளிநடப்பு செய்து தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றியுள்ளதாக, புதுப்பட்டினம் பொதுக்கூட்ட பிரச்சாரத்தில் தொல்.திருமாவளவன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் சட்டப்பேரவை தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் வேட்பாளர் பனையூர் பாபு போட்டியிடுகிறார். இவருக்கு ஆதரவாக அத்தொகுதியின் பல்வேறு இடங்களில் அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் நேற்று மாலை (மார்ச் 23) வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், புதுப்பட்டினம் பேருந்து நிலையம் அருகே பொதுக்கூட்ட பிரச்சாரம் மூலம் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.
இதில், திருமாவளவன் பேசியதாவது:
"மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பாஜகவுக்கு எதிராக கருத்து தெரிவித்து பேசியதை யாராலும் மறக்க முடியாது. பாஜகவுடன் ஒருமுறை கூட்டணி வைத்ததை எண்ணி வருத்தப்பட்டு ஜெயலலிதா அழுத்தம் திருத்தமாக ஒரு கருத்தை கூறினார். 'மோடியா? இந்த லேடியா? மோதி பார்ப்போம்' என்றார். பாஜகவை ஒருகை பார்ப்போம் என்று சவால் விட்டார் ஜெயலலிதா. அதிமுக தொண்டர்கள் அதை மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
இலங்கையின் ராஜபக்ச அரசுக்கு எதிராக ஐநா மனித உரிமை கவுன்சிலின் சர்வதேச குற்ற புலனாய்வு விசாரணை நடத்துவதற்கு ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக 22 நாடுகளும் மற்றும் தீர்மானத்திற்கு எதிராக பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகளும் இருக்கின்றன.
ஆனால், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்காக இந்தியா வெளிநடப்பு செய்து புறக்கணித்திருக்கிறது. தீர்மானத்தை எதிர்த்து வாக்கு செலுத்தியிருக்க வேண்டும் அல்லது ஆதரித்து வாக்கு செலுத்தியிருக்க வேண்டும். உண்மையில் இலங்கைக்கு எதிராக வாக்கு செலுத்தியிருக்க வேண்டும்.
தமிழர்களுக்கு இவர்கள் உண்மையிலேயே நல்லது செய்யக் கூடியவராக இருந்தால், முள்ளிவாய்க்கால் படுகொலைக்குக் காரணமான ராஜபக்சவை சர்வதேச குற்றப் புலனாய்வு விசாரணைக்கு உட்படுத்தக்கூடிய வகையில், சர்வதேச குற்றவாளிக்கூண்டில் நிறுத்துவதற்கு ஆதரவாக தீர்மானத்திற்கு வாக்களிக்க வேண்டும். ஆனால், அவரை காப்பாற்றுவதற்காக இலங்கை அரசுக்கு எதிராக இந்தியா வாக்கு செலுத்தவில்லை".
இவ்வாறு அவர் பேசினார்.