Published : 24 Mar 2021 12:54 PM
Last Updated : 24 Mar 2021 12:54 PM

அதிமுக - பாஜக கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது; அப்பட்டமான சந்தர்ப்பவாத கூட்டணி: கே.எஸ்.அழகிரி விமர்சனம்

ஊழலில் ஊறித் திளைத்த அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (மார்ச் 24) வெளியிட்ட அறிக்கை:

"ஏழைகள் என்ற சொல்லை இல்லாமல் செய்வதே எங்கள் லட்சியம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறுகிறார். பாஜகவுடன் சேர்ந்து ஏழைகளே இல்லாமல் செய்து கொண்டிருக்கிறீர்கள். பொது முடக்கத்துக்குப் பிறகு வாழ்வாதாரத்துக்கே வழியின்றி ஏழைகள் இருக்கிறார்கள். பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு என கடும் சுமையை ஏற்றி மக்களைச் சித்ரவதை செய்து கொண்டிருக்கிறீர்கள். நடுத்தர வர்க்கம் நடுத்தெருவுக்கு வந்துவிட்டது. ஏழைகள் பசியால் செத்துக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் லட்சியம் என்றோ நிறைவேறிவிட்டது.

கடந்த மாதம் 27ஆம் தேதி முதல் பெட்ரோல் விலை லிட்டருக்கு 93.11 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 86.45 ரூபாயாகவும் இருந்து வந்தது. இதன் காரணமாக, விலைவாசியும் உயர்ந்ததோடு, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் சொல்லொணாத் துயரம் அடைந்தனர். தேர்தல் முடிவு கணிப்புகள் திமுகவுக்குச் சாதகமாக இருப்பதாகச் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து 93 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 16 காசுகள் குறைத்து லிட்டருக்கு 86.29 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விலைக்குறைப்பு மக்களின் துயரத்தைத் துடைக்கக் கூடியதல்ல. பெட்ரோலை லிட்டருக்கு ரூ.44 ஆகவும், டீசலை லிட்டருக்கு ரூ.38 ரூபாயாக நிர்ணயித்தால் மட்டுமே உண்மையான விலைக்குறைப்பு. இதை எல்லாம் நம்பி தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல்படுத்தாமல் இருக்க அழுத்தம் கொடுப்போம் என அதிமுக தமது தேர்தல் அறிக்கையில் கூறியிருக்கிறது. ஆனால், பாஜகவின் தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா அசாமில் நேற்று வெளியிட்டுள்ள பாஜக தேர்தல் அறிக்கையில், குடியுரிமைச் சட்டம் அசாமைத் தவிர நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் என்று உறுதியளிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மையினத்தவரைக் குறிவைத்துக் கொண்டு வரப்பட்ட இந்தச் சட்டத்தை முதலில் ஆதரித்து நாடாளுமன்றத்தில் வாக்களித்த அதிமுக, இப்போது அமல்படுத்தாமல் இருக்க அழுத்தம் கொடுப்போம் என்கிறது. அமல்படுத்தியே தீருவோம் என பாஜக உறுதியாக தெரிவித்துவிட்டது. இப்போது என்ன சொல்லப் போகிறது அதிமுக?

சிறுபான்மை முஸ்லிம்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றுவதற்காகவே மத்திய பாஜக அரசால் கொண்டுவரப்பட்டதுதான் குடியுரிமைச் சட்டத் திருத்தம். மக்களவையில் பெரும்பான்மை பலம் இருந்த காரணத்தால், குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை பாஜக நிறைவேற்றியது. ஆனால், மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாத காரணத்தால் அதிமுக ஆதரவைப் பெற்று மசோதா நிறைவேற்றப்பட்டது.

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை ஆதரித்தவர்களில் 10 அதிமுக உறுப்பினர்களும், பாமகவைச் சேர்ந்த அன்புமணி ராமதாஸும் அடங்குவார்கள். குடியுரிமைச் சட்டத் திருத்தத்தை அதிமுக எதிர்த்திருந்தால், அந்த மசோதாவை பாஜகவால் நிறைவேற்றியிருக்க முடியாது. இன்றைக்கு குடியுரிமைச் சட்டத் திருத்தம் நிறைவேறியிருக்கிறது என்று சொன்னால் அதற்கு அதிமுகவும் பாமகவும்தான் காரணம்.

ஆனால், சமீபத்தில் அதிமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 80ஆவது வாக்குறுதியாக, 'மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியிருக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வலியுறுத்தல் என்ற தலைப்பில், மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அதிமுக தொடர்ந்த அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை ஆதரித்துச் சட்டமாக்கிவிட்டு இன்றைக்கு அதைக் கைவிட வேண்டும் என்று தேர்தல் அறிக்கையில் கூறுவதை விட இரட்டை வேடம் வேறு ஏதும் இருக்க முடியாது. இதன் மூலம் முஸ்லிம்களின் வாக்கு வங்கிகளை ஏமாற்றிப் பெற்று விடலாம் என்ற எடப்பாடி பழனிசாமியின் முயற்சிகள் பகல் கனவாகத்தான் முடியும்.

எனவே, ஊழலில் ஊறித் திளைத்த அதிமுக ஆட்சியைப் பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில்தான் பாஜகவோடு அதிமுக கூட்டணி அமைத்திருக்கிறது. இந்தக் கூட்டணிக்கு எந்தக் கொள்கையும் கிடையாது. இது ஒரு அப்பட்டமான சந்தர்ப்பவாத கூட்டணி. இக்கூட்டணி ஏன் அமைந்தது? எதற்காக அமைந்தது என்பதைத் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.

வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, அதிமுக அமைத்திருக்கிற சந்தர்ப்பவாத கூட்டணிக்கு எதிராக மக்கள் வாக்களித்து, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு அமோக ஆதரவளித்து வெற்றி பெறுகிற வகையில் வாக்களிக்கப் போகிறார்கள் என்பது நாளுக்கு நாள் உறுதியாகி வருகிறது".

இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x