Published : 24 Mar 2021 08:58 AM
Last Updated : 24 Mar 2021 08:58 AM

முதல்வர் பழனிசாமி விவசாயி அல்ல, போலி விவசாயி: ஸ்டாலின் சாடல்

முதல்வர் பழனிசாமி விவசாயி அல்ல, போலி விவசாயி , விளம்பரத்தால் விவசாயி ஆகிவிடலாம் என்று நினைக்கிறார், இது விவசாயிகளுக்கு கேவலம் என திமுக தலைவர் ஸ்டாலின் கூறினார்.

பாலக்கோட்டில் நடந்த பிரச்சாரக் கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு உரையாற்றியதாவது:

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் பொதுத்தேர்தலில் நீங்கள் எல்லாம் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.

பழங்காலத்தில் தகடூர் என்று அழைக்கப்பட்ட இந்த தருமபுரிக்கு வந்திருக்கிறேன். கடையேழு வள்ளல்களில் ஒருவரான அதியமான் வாழ்ந்த மண்ணுக்கு வந்திருக்கிறேன். தருமபுரிக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கொண்டு வந்த இந்த ஸ்டாலின் உரிமையோடு உங்களில் ஒருவனாக உங்கள் வீட்டுப் பிள்ளையாக வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இந்த மாவட்டத்திற்கு ஒரு அமைச்சர் இருக்கிறார். இருக்கிறார் என்று சொன்னேனே தவிர செயல்படுகிறார் என்று சொல்லவில்லை. அவர் பெயர் கே.பி.அன்பழகன். உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து என்ன சாதித்தார் என்று தேடித் தேடிப் பார்க்கிறேன். ஒன்றும் கிடைக்கவில்லை. உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்து நீட்டை அனுமதித்தார். அதாவது அனிதா உட்பட பல மாணவ - மாணவியர்கள் இந்த 'நீட்'டினால் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கிறார்கள். அதைத்தான் செய்தார் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன்.

நாம் எதிர்க்காமல் இருந்திருந்தால் அண்ணா பல்கலைக்கழகத்தை கபளீகரம் செய்திருப்பார்கள். அந்தத் துறை மீது அக்கறை இல்லாத ஒரு அமைச்சர் யார் என்றால் அது அன்பழகன்தான்.

எதற்கும் உபயோகம் இல்லாதவரை வைத்துக் கொண்டிருக்கலாமா? அவர் மட்டுமல்ல, எல்லா அமைச்சர்களும் அப்படித்தான். இவர்களுக்கு தலைமை வகித்து கொண்டிருக்கும் ஒருவர் இருக்கிறார், முதல்வர் . அவருக்கு எவ்வாறு பதவி கிடைத்தது என்று சொன்னால் அவருக்கு கோபம் வந்துவிடும். அவர் படிப்படியாக வளர்ந்து வந்தாராம். ஸ்டாலின் மாதிரி திடீரென்று வளர்ந்து வரவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

படிப்படியாக வந்தாரா? ஊர்ந்து வந்தாரா? தவழ்ந்து வந்தாரா? சசிகலா காலில் விழுந்தீர்களா? இல்லையா? முதலில் அதைச் சொல்லுங்கள். அதுவும் ஊர்ந்து சென்று விழுந்தீர்களா? இல்லையா? அதைச் சொல்லுங்கள்.
சமூக வலைதளங்களில் பார்த்திருந்தால் தெரியும். அவர் ஊர்ந்து வரும் போது அருகிலிருந்த திண்டுக்கல் சீனிவாசன் பதறி ஏதோ ஊர்ந்து வருகிறது என்று பயந்து எழுந்து நிற்கிறார். இதைச் சொன்னால் அவருக்குக் கோபம் வந்துவிடும்.

இப்போது அவர்கள் கோடி கோடியாக செலவு செய்து, பக்கம் பக்கமாக பத்திரிகைகளில் மக்களின் வரிப் பணத்தைப் பயன்படுத்தி விளம்பரப்படுத்தி கொண்டிருப்பதெல்லாம் என்ன? விவசாயிகளை காப்பாற்றி விட்டதாக, வேளாண்மையைச் செழிக்க வைத்து விட்டதாகப் பக்கம் பக்கமாக விளம்பரம் கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.

அவர் விவசாயி அல்ல, போலி விவசாயி. போலி விவசாயியாக இருக்கும் மிஸ்டர் பழனிசாமி அவர்களே… நீங்கள் என்னதான் குட்டிக்கரணம் போட்டாலும் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றவே முடியாது. எவ்வளவுதான் விளம்பரம் கொடுத்தாலும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. எவ்வாறு மந்திரத்தால் மாங்காய் வரவழைக்க முடியாதோ, அதேபோல எவ்வளவு விளம்பரத்தாலும் இந்த மண்ணை செழிக்க வைக்க நிச்சயம் முடியாது.

விளம்பரத்தால் விவசாயி ஆகிவிடலாம் என்று நினைக்கிறீர்கள். இது விவசாயிகளுக்கு கேவலம். எப்போது பார்த்தாலும் விவசாயி விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில் பச்சைத் துண்டு போட்டுக் கொண்டிருக்கும், விவசாயிகளுக்கு பச்சை துரோகியாக அவர் நடந்து கொண்டிருக்கிறார். இதை நிச்சயம் விவசாயிகள் மறக்கமாட்டார்கள்.

மத்திய ஜல்சக்தித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், அதிகாரமில்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியத்தை ஆக்கி, டெல்டா விவசாயிகளுக்கு துரோகம் செய்திருப்பவர்தான் இந்த பச்சைத் துண்டு பழனிசாமி. சேலம், தருமபுரி, திருவண்ணாமலை போன்ற மாவட்ட விவசாயிகளும் இப்போது நிம்மதியாக இல்லை.

குடிமராமத்து என்று சொல்லி மணல் கொள்ளையை நடத்தி போலி பில் போட்டு கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த போலி விவசாயியாக நடித்துக்கொண்டிருக்கும் பழனிசாமியின் ஆட்சி. கரும்பு டன் ஒன்றுக்கு 200 ரூபாய் ஊக்கத்தொகை தி.மு.க. ஆட்சியில் கொடுத்தோம். இப்போது 137 ரூபாயாகக் குறைந்து விட்டார்கள்.

அதேபோல விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவைத் தொகையைக் கொடுக்காமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார்கள். நெல் கொள்முதல் செய்ய லஞ்சம், அவ்வாறு செய்தாலும் முழுமையாக செய்யவில்லை.

புயலால் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகளுக்கு இன்னமும் இழப்பீடு தர வில்லை. இது அனைத்திற்கும் மேலாக இலவச மின்சாரத்தை ரத்து செய்ய துடிக்கும் மத்திய அரசிற்கு ஒத்து ஊதிக் கொண்டிருக்கும் அடிமை ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அ.தி.மு.க. ஆட்சி.

மீட்டரை பொருத்தி மத்திய அரசு விவசாயிகளிடம் பணம் வாங்க போகிறார்கள். மூன்று வேளாண் சட்டத்தை ஆதரித்த, வேளாண் விரோத அ.தி.மு.க. அரசை நீங்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்.

பத்தாண்டுகாலமாக இந்த தமிழகத்தை சீரழித்து விட்டார்கள். தமிழகம் 50 ஆண்டு காலம் பின்னோக்கி பாதாளத்துக்கு சென்று விட்டது. ஊழல் செய்வது - பொய் சொல்வதுதான் இந்த ஆட்சி.

இந்த ஆட்சியின் அவலத்தை எளிமையாக சொல்ல வேண்டுமென்றால், இது பொல்லாத ஆட்சி - அதற்கு சாட்சி பொள்ளாச்சி, இது துப்புகெட்ட ஆட்சி - அதற்கு சாட்சி தூத்துக்குடி, இது சாகடிக்கும் ஆட்சி - அதற்கு சாத்தான்குளம் சாட்சி, இது அ.தி.மு.க. ஆட்சி அல்ல, இது அடிமை ஆட்சி.

எனவே எத்தனை முறை பிரதமர் வந்து பிரச்சாரம் செய்தாலும் தமிழ்நாட்டில் பா.ஜ.க. வரவேப்போவதில்லை. அதே நேரத்தில் ஒரு அ.தி.மு.க. வேட்பாளர்கூட வெற்றி பெற்று விடக்கூடாது. அ.தி.மு.க. வேட்பாளர் வென்றால் அவர் பாஜக எம்எல்ஏ-தான். எனவே அந்தக் கோரிக்கையை உங்களிடத்தில் வலியுறுத்தி, வற்புறுத்தி கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.

தமிழ் மண்ணில் இந்தியைத் திணித்து, நீட்டை கொண்டுவந்து நுழைத்து, மத வெறியை தூண்ட நினைப்பவர்களுக்கு, நான் உறுதியோடு சொல்ல விரும்புவது, அது நடக்கவே நடக்காது.

இது திராவிட மண். தந்தை பெரியார் - அண்ணா - கலைஞர் வாழ்ந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இங்கு பலிக்காது. இது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதை மறந்துவிடாதீர்கள்.

நம்முடைய மாநில உரிமைகள் பறி போய்க் கொண்டிருக்கின்றன. நம்முடைய தன்மானம் பறிபோய்க் கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி எல்லாவற்றையும் அடமானம் வைத்து விட்டது.

எனவே நம்முடைய தமிழ்நாட்டை காப்பாற்ற, சுயமரியாதையை காப்பாற்ற நடக்கின்ற தேர்தல் என்பதை மனதில் பதிய வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய மாநில உரிமைகளைப் பாதுகாக்க, விவசாயிகளின் வாழ்க்கை செழிக்க, தருமபுரி இன்னும் பல சிறப்புகள் பெற மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை ஆதரிக்கவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x