

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை (தனி) ஆகிய 4 தொகுதிகளிலும் பணப்பட்டுவாடா, தேர்தல் விதிமீறல்கள், வேட்பாளர்கள் செலவுகளைக் கண்காணிக்க நிலையான குழு, செலவின கண்காணிப்புக் குழு, பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இக்குழுக்களால் பணப் பட்டுவாடாவை முழுமையாகத் தடுக்க முடியவில்லை.
இதனால் அதிகாரிகளை நம்பி இனி பயனில்லை எனக் கருதிய அதிமுக, திமுக கூட்டணியினர் எதிர் வேட்பாளர்களின் பணப் பட்டுவாடாவை வீடியோ எடுத்து புகார் தெரிவிக்க தனிப்படைகளை அமைத்துள்ளனர். அவர்கள் எதிர் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்கள், செயல் வீரர்கள் கூட்டங்களுக்குச் சென்று பணப் பட்டுவாடாவை வீடியோ எடுத்து தேர்தல் அதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் புகார் தெரிவித்து வருகின்றனர்.
சிவகங்கையில் அண்மையில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கூட்டணிக் கட்சியினர் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு பணப் பட்டுவாடா செய்ததை அதிமுக தரப்பினர் வீடியோ எடுத்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தனர். இதையடுத்து 11 பேர் மீது வழக்குப் பதியப்பட்டது. அதேபோல் இரு தினங்களுக்கு முன்பு, காளையார்கோவில் பகுதியில் ஆரத்தி எடுத்தவர்களுக்கு அதிமுகவினர் பணப் பட்டுவாடா செய்ததை திமுக தரப்பினர் வீடியோ எடுத்து தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பினர். இதுகுறித்தும் தேர்தல் அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். கட்சிகளின் தனிப்படையால் தேர்தல் பறக்கும் படைகளுக்கு கண்காணிப்புப் பணி எளிதாகியுள்ளது.