Published : 24 Mar 2021 03:14 AM
Last Updated : 24 Mar 2021 03:14 AM

கள்ளநோட்டு போன்றது திமுக தேர்தல் அறிக்கை: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று பிரச்சாரம் மேற்கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம். உடன், தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி.படம்: ஜெ.மனோகரன்

கோவை

திமுக தேர்தல் அறிக்கை கள்ள நோட்டு போன்றது என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

அதிமுக வேட்பாளர்கள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி (தொண்டாமுத்தூர்), அம்மன் கே.அர்ச்சுணன் (கோவை வடக்கு), கே.ஆர்.ஜெயராமன் (சிங்காநல்லூர்), வி.பி.கந்தசாமி (சூலூர்), செ.தாமோதரன் (கிணத்துக்கடவு), அமுல்கந்தசாமி (வால்பாறை), பொள்ளாச்சி ஜெயராமன் (பொள்ளாச்சி), பாஜகவேட்பாளர் வானதி சீனிவாசன் (கோவை தெற்கு) ஆகியோரை ஆதரித்து, கோவை மலுமிச்சம்பட்டியில் நேற்று அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:

திமுக ஆட்சியில் எதையுமே செய்யவில்லை. எனவே, அவர்களால் அதைச் செய்தோம், இதைச்செய்தோம் என சொல்ல முடியாது. அவர்கள் ஆட்சி காலத்தில் சட்டம்ஒழுங்கு பிரச்சினை, நிலஅபகரிப்பு இருந்தது.

திமுக தேர்தல் அறிக்கை கள்ளநோட்டு போன்றது, அது செல்லாது. அதிமுக தேர்தல் அறிக்கைநல்லநோட்டு. அதுதான் செல்லும்.தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி திருமண நிதியுதவி உறுதியாக உயர்த்தி வழங்கப்படும்.

மகளிருக்கு மாதந்தோறும் வங்கிக் கணக்கில் பணம் வந்து சேரும். விலையில்லாமல் 6 சிலிண்டர், வாஷிங் மெஷின் கிடைக்கும்.அதிமுக ஆட்சியில் ஜாதிச் சண்டைகள் இல்லை. மதச் சண்டைகள் இல்லை. சகோதரர்களாக அனைவரும் வாழ்ந்து வருகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

மேட்டுப்பாளையத்தில் பிரச்சாரம்

முன்னதாக அதிமுக வேட்பாளர்கள் ஏ.கே.செல்வராஜ் (மேட்டுப்பாளையம்), ப.தனபால் (அவிநாசி), பி.ஆர்.ஜி.அருண்குமார் (கவுண்டம்பாளையம்), கப்பச்சி டி.வினோத் (குன்னூர்), பொன்.ஜெயசீலன் (கூடலூர்), பாஜக வேட்பாளர் போஜராஜன் (உதகை)ஆகியோரை ஆதரித்து மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்ட ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “மத்திய காங்கிரஸ் - திமுக ஆட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட விலங்கினங்கள் பட்டியலில் காளைகள் இருந்தன. அந்த தடையை நீக்கி, 24 மணி நேரத்தில் 4 துறைகளிடம் அனுமதி பெற்று, ஜல்லிக்கட்டு நடக்க வழிவகுத்தவர் பிரதமர் நரேந்திரமோடி. தற்போது எதிர்க்கட்சியாக உள்ள திமுக, நிரந்தர எதிர்க்கட்சிதான்.

திமுக மீண்டும் ஆட்சிக்கு வராது. மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது. சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x