

கோவை தெற்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு தேர்தலில் இதே தொகுதியில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்ற வானதிசீனிவாசன், இந்த முறை அதிமுக கூட்டணியுடன் இணைந்துள்ளதால், எப்படியும் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கியுள்ளார்.
வானதி சீனிவாசன் பாஜக தேசிய மகளிர் அணியின் தலைவியாக இருந்து வருவதால், அவருக்கு ஆதரவாக, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட, டெல்லி பாஜக தேசிய மகளிர் அணியில் இருந்து 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோவைக்கு வந்துள்ளனர். இவர்கள், கோவை தெற்கு தொகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதுதொடர்பாக பாஜக மாநில செய்தித்தொடர்பாளர் சபரிகிரீஷ் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘இவர்கள் ‘நம்ம ஓட்டு தாமரைக்கு’ என்ற தமிழ் வாசகத்தை கற்றுள்ளனர். அதை கோஷமிட்டபடி, கட்சி சின்னத்தின் பதாகையுடன் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வடமாநிலங்களைச் சேர்ந்த மக்கள் அதிகளவில் வசிக்கும் ஆர்.எஸ்.புரம், சுக்ரவார்பேட்டை, சலீவன் வீதி, ரங்கே கவுடர் வீதி, பூமார்க்கெட் சாலை உள்ளிட்ட இடங்களில் மேள தாளங்களுடன் சென்று, நடனம் ஆடியபடி ‘தாமரை’ சின்னத்துக்கு வாக்கு சேகரித்து வருகின்றனர். இது மக்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது’’ என்றார்.