பண மூட்டைகளைக் கொண்டு பாஜக தேர்தலை எதிர்கொள்கிறது: தொண்டமாநத்தம் பிரச்சாரத்தில் நாராயணசாமி குற்றச்சாட்டு

ஊசுடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தொண்டமாநத்தம் பகுதியில்  பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
ஊசுடு தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்திகேயனை ஆதரித்து தொண்டமாநத்தம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட முன்னாள் முதல்வர் நாராயணசாமி.
Updated on
1 min read

பணமூட்டைகளை புதுச்சேரிக்கு கொண்டு வந்து, இந்தத் தேர்தலை பாஜக எதிர்கொள்கிறது. பாஜகவை நம்பி செல்வோர் நடுரோட்டுக்குதான் செல்வார்கள் என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி எச்சரித்துள்ளார்.

புதுச்சேரியில் ஊசுடு தொகுதியில் தொண்டமாநத்தம் பகுதியில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி நேற்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியது:

புதுச்சேரியில். சதிவேலை செய்து காங்கிரஸ் அரசை பாஜக கவிழ்த்தது. பணமூட்டைகளை புதுச்சேரிக்கு கொண்டு வந்து, இந்தத் தேர்தலை பாஜக எதிர் கொள்கிறது. இந்த பாஜகவை நம்பி செல்வோர் நடுரோட்டுக்குதான் செல்வார்கள். அதற்கு உதாரணம் பாஜகவுக்கு சென்ற முன்னாள் எம்எல்ஏ தீப்பாய்ந்தான். அவருக்கு இம்முறை எம்எல்ஏ சீட் கூட கிடைக்கவில்லை.

காங்கிரஸ்- திமுக கூட்டணிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. கண்டிப்பாக மீண்டும் காங்கிரஸ்-திமுக கூட்டணி வெல்லும். பாஜக ஆட்சிக்கு வந்தால் புதுவை காவி மயமாகிவிடும்.

விலைவாசி உயர்வு அதிகமாகும். கேஸ், பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம் பாஜகதான். மக்கள் நலன் மீது பாஜகவுக்கு அக்கறையில்லை. ரூ. 15 லட்சம் அளிப்பதாக கூறி 7 ஆண்டுகளாகியும் இதுவரை நிறைவேற்றவில்லை.

பாஜக வாக்குறுதி மக்களை ஏமாற்றவே அளிக்கப்படுகிறது என்று குறிப்பிட்டார்.

பிரச்சாரத்தில் எம்பி வைத்திலிங்கம் மற்றும் கூட்டணிக்கட்சித்தலைவர்கள் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in