

‘நானும் விவசாயிதான்' எனக்கூறி புதுவை கிராமப் பகுதி வாக்குகளைப் பெற புதுப்புதுமுறைகளை வேட்பாளர்கள் கையாள்கின் றனர்.
தேநீர் கடையில் ரிலாக்ஸ் ஆக உட்கார்ந்து தேநீர் குடிப்பது, இருசக்கர வாகனத்தில் பவனி வந்து எளிமையான அரசியல்வாதி என காட்டிக் கொள்வது என விதவிதமாக வித்தியாசம் காட்டும் புதுச்சேரி ட்ரென்ட் செட் இந்த பேரவைத் தேர்தலில் தமிழகத்திலும் பற்றி படர்ந்திருக்கிறது. தேநீர் குடிப்பது, புரோட்டா கடையில் புரோட்டோ போடுவது, கூழ் குடிப்பது என தங்களை எளிமையின் விரும்பிகளாக பிரச்சார களத்தில் காட்டிக் கொண்டு வேட்பாளர்கள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுச்சேரி நகர் பகுதியில் திறந்த வேனில் மைக் தெறிக்க பிரச்சாரம் செய்யும் அனைத்துக் கட்சியினரும், கிராமப் பகுதிகளுக்குள் சென்றால், வயல்களில் இறங்கி ‘நானும் விவசாயிதான்' எனக் கூறி, அங்கு விவசாயிகள் செய்யும் பணிகளை தாங்களும் செய்து ‘டச்’சிங் கொடுக்கின்றனர்.
புதுச்சேரி கிராமப் பகுதியிலுள்ள மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம், திருக்கனூர் கிராமத்தில் விவசாய நிலத்திற்கு சென்று வாக்கு சேகரித்தார். அங்கு நிலக்கடலை பறித்த விவசா யிகளுடன் பேசினார்.
அவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால், அவர்களுடன் அமர்ந்து நிலக் கடலையை ஆய்ந்தவாறே அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்தார். அவர்களும் ஆண்டுக்கணக்கில் இருக்கும் அவர்களது ஆற்றாமையைக் கூற, ‘நாங்கள் வருகிறோம்; எல்லாம் செய்கிறோம். ஆதரவை அள்ளித் தாருங்கள்’ என்று கூறி வாக்கு சேகரித்தார்.
ஏம்பலம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச் சர் கந்தசாமி கோர்காடு கிராமத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரில் ஏரி அமர்ந்து, ஒரு கையில் டிராக்டர் கம்பியை பிடித்தபடி, மறு கையில் நோட்டீஸ் விநியோகித்து வாக்கு சேகரிக்கத் தொடங்கினார். ‘‘உழவு அடிச்ச கையி, சேத்துல நின்ன காலு; எனக்கும் விவசாயம் நல்லா தெரியும். உங்க பிரச்சினையும் புரியும். ‘கை’ கொடுங்க. நாங்க ‘கை’ விடமாட்டோம்” என்று சொல்ல, வழக்கம் போல மக்கள் பிரச்சினைகளைக் கூற, “மீண்டும் ஆட்சிக்கு வர்றோம்; அத்தனையும் சரி செய்றோம்” என்று கூறி விட்டு, அடுத்த கிராமத்திற்கு கிளம்பினார்.
மணவெளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் அனந்தராமன் திம்மநாயக்கன்பாளையம் கிராமத்தில் வாக்கு சேகரித்தபோது விவசாயிகள் பணியில் மும்முரமாக இருந்தனர். அவர் களிடம் வரப்பு ஓரம் நின்றபடி ஆற அமர வாக்கு சேகரித்த அவர், “என்ன தான் நான்படிச்சிருந்தாலும், அடிப்படையில் நான் ஒரு விவசாயிதான்!” என்று கூற, அங்கி ருந்தவர்கள், “களை எடுப்பீர்களா!” என்று கேட்க, உடனே வயலில் இறங்கி களை எடுத்துக் காண்பித்தார்.
கிராமப் புறங்களுக்குச் செல்லும் வேட்பாளர்களின் இந்நடவடிக்கை அப்பகுதி வாக்காளர்களுக்கு நிறைவான பொழுதுபோக்காக அமைந்து விடுகிறது. இந்த வாஞ்சையும் இலகுவான தன்மையும் வெற்றி பெற்று வந்த பிறகும் இருக்க வேண்டும் என்று கிராமப் பகுதி வாக் காளர்கள் பேசிக் கொள்வதையும் பார்க்க முடிந்தது.