

தென் மாவட்டங்களில் போட்டி யிடும் அதிமுக-பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மதுரையில் ஏப்.2-ல் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்கின்றனர்.
தமிழகத்தில் ஏப்.6-ல் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. வேட்பாளர்களுக்கு ஆதரவாக கட்சித் தலைவர்கள் தீவிர பிரச் சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தென் மாவட்டங்களில் போட்டியிடும் திமுக, அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச் செயலர் வைகோ, திமுக இளைஞர் அணிச் செயலர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
முதல்வர் பழனிசாமி அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரையில் நாளையும் (மார்ச் 25), நாளை மறுநாளும் பிரச்சாரம் செய்கிறார்.
பாஜக சார்பில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, நிர்மலா சீதாராமன், ஸ்மிருதிராணி, நிதின்கட்கரி, ஜெய்சங்கர், வி.கே .சிங், மாநில முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், சிவராஜ்சிங் சவுகான், பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தமிழக பாஜக தலைவர்கள், நடிகர்கள் என 30-க்கும் மேற்பட்ட தலைவர்கள் பிரச் சாரத்துக்கு வரவுள்ளனர்.
தென் மாவட்டங்களில் கன்னி யாகுமரி நாடாளுமன்ற இடைத் தேர்தல், சட்டப் பேரவை தேர்தலில் மதுரை வடக்கு, காரைக்குடி, ராம நாதபுரம், விருதுநகர், நெல்லை, நாகர்கோவில், குளச்சல், விள வங்கோடு தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது. இதனால் தென் மாவட்ட தேர்தல் பிரச்சாரத்தில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்துக்காக பிர தமர் மோடி மார்ச் 30-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்று தாராபுரத்தில் போட்டியிடும் பாஜக தலைவர் எல்.முருகன், கோவை, திருப்பூர், கரூர் மாவட்ட அதிமுக- பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
பிரதமர் மோடி இரண்டாம் கட்ட பிரச்சாரத்துக்காக ஏப்ரல் 2-ல் மதுரை வருகிறார். அன்று காலை மதுரை பொதுக்கூட்டத்தில் மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் அதிமுக-பாஜக கூட்டணி வேட் பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இதே மேடையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பேசுகின்றனர்.
மதுரையில் பொதுக்கூட்டத்தை முடித்து நாகர்கோவில் செல்லும் பிரதமர் மோடி, அங்கு அன்று மாலை நடைபெறும் பொதுக்கூட்டத்தில் தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங் களில் போட்டியிடும் அதிமுக-பாஜக வேட்பாளர்களையும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனையும் ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
இது குறித்து மதுரை பாஜக நிர்வாகி ஒருவர் கூறுகையில், மதுரையில் ஏப்ரல் 2-ல் பிரதமர் மோடி பேசவுள்ள பொதுக் கூட்டத்துக்கு மதுரை விமான நிலையம் அருகே எய்ம்ஸ் அடிக்கல் நாட்டு விழா நடைபெற்ற மைதானம், மதுரை விவசாயக் கல்லூரி அருகேயுள்ள மைதானம், பாண்டி கோயில் அருகே அம்மா திடல் ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அம்மா திடலில் பொதுக்கூட்டம் நடைபெற அதிக வாய்ப்புள்ளது என்றார்.