Published : 24 Mar 2021 03:15 AM
Last Updated : 24 Mar 2021 03:15 AM

ஆட்சியில் அதிமுக இருக்கும்போது திட்டங்களை நிறைவேற்றியதாக திமுக எப்படி கூற முடியும்? - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கேள்வி

பத்து ஆண்டுகளாக ஆட்சியில் அதிமுக இருக்கும்போது திட்டங் களை திமுகவினர் கொண்டு வந்து நிறைவேற்றியதாக எப்படி கூற முடியும் என அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி கேள்வி எழுப்பினார்.

ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பாக போட்டியிடும் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, நேற்று கிருஷ்ணாபுரம், சோலைச்சேரி, தளவாய்புரம், முகவூர், ஜமீன் நல்லமங்கலம், புத்தூர், அருள்புத்தூர், மீனாட்சிபுரம், சொக்கநாதன்புத்தூர், கோவிலூருக்குச் சென்று சமுதாயத் தலைவர்கள், நாட்டாமைகள், மக்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார். கிருஷ்ணாபுரம், தளவாய்புரம், அருள்புத்தூரில் அமைச்சர் திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டார். மீனாட்சிபுரம், கோவிலூர் பகுதியில் உள்ள பாதிரியார்களைச் சந்தித்து வாக்குச் சேகரித்தார்.

பிரச்சாரத்தின்போது அமைச்சர் பேசியதாவது: 10 ஆண்டுகளாக ஆட்சியில் அதிமுக இருக்கும்போது திட்டங்களை மட்டும் திமுகவினர் எப்படி கொண்டுவரமுடியும். 2011-ல் சேத்தூரில் பூமிபூஜை போட்டு நான் தொடங்கி வைத்த கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை திமுக எம்எல்ஏ நான்தான் கொண்டு வந்தேன் என்கிறார். சத்திரப்பட்டி ரயில்வே மேம்பாலம், பாதாள சாக்கடைத் திட்டம், தாமிரபரணி கூட்டுக் குடிநீர் திட்டம் என தொகுதிக்கு 10 ஆண்டுகளில் ஆயிரம் கோடிக்கு மேல் திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். ராஜபாளையத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜி 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்ற வரலாறை உருவாக்க வேண்டும் என்றார். பிரச்சாரத்தில் கூட்டணிக் கட்சி யினர் உடன் சென்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x