வெற்றியை கணிக்க முடியாத தொகுதி குளச்சல் காங்கிரஸ் - பாஜக இடையே கடும் போட்டி

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
2 min read

குளச்சல் சட்டப்பேரவைத் தொகுதியில் தொடர்ச்சியாக 3-வது முறை வெற்றிபெறும் முயற்சியில் காங்கிரஸ் தீவிரம் காட்டி வருகிறது. வெற்றி முத்திரையைப் பதிக்க பாஜகவும் போராடுகிறது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், அதிமுக, பாஜக, திமுக வாக்கு வங்கிகள் பரவலாக கொண்டது குளச்சல் சட்டப்பேரவை தொகுதி. நாடார் சமூகத்தினர் வாக்குகள் அதிகம் இருந்தாலும் வெற்றிதோல்வியை மீனவர்களின் வாக்கு வங்கி முடிவு செய்கிறது. கிருஷ்ணவகை சமுதாயத்தினர், இஸ்லாமியர் வாக்குகளும் முக்கிய பங்குவகிக்கின்றன.

கடந்த 2016 தேர்தலில் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ், பாஜக, அதிமுகஆகிய கட்சிகளுக்கிடையே மும்முனைப்போட்டி நிலவியது. கடந்தமுறை களம் கண்ட காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸ், பாஜகவேட்பாளர் குமரி ரமேஷ் ஆகியோர்மீண்டும் போட்டியிடுகின்றனர். ஒரே வித்தியாசம் கடந்த முறை தனித்துப் போட்டியிட்ட அதிமுக, இம்முறை பாஜகவுக்கு ஆதரவளிக்கிறது. எனவே, இருமுனைப் போட்டி நிலவுகிறது.

காங்கிரஸ், திமுக வாக்குகளுடன் மீனவர்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் அதிகமான வாக்குகளும் கிறிஸ்தவ நாடார் சமூகத்தைச் சேர்ந்த பிரின்ஸுக்கு சாதகமாக இருப்பது அவரது பலம்.

எனவே, குளச்சல் தொகுதியில் தொடர்ந்து 3-வது முறையாக வெற்றிபெற வேண்டும் என்ற முனைப்பில் தொகுதியில் கடுமையாக சுற்றிச்சுழல்கிறார் பிரின்ஸ். அதேவேளை, தொடர்ந்து இருமுறை எம்எல்ஏவாக இருந்த போதிலும், குளச்சல் தொகுதியில் பெயர் சொல்லும் வகையிலான திட்டங்கள் ஏதும் வரவில்லை என்பது அத்தொகுதி மக்களின் ஆதங்கமாக உள்ளது.

அதேநேரம், 2016 தேர்தலில் பாஜகமற்றும் அதிமுகவுக்கு கிடைத்த வாக்குகள் அப்படியே இம்முறை கிடைத்தால் கூட பாஜகவுக்கு குளச்சல் சாதகமாகிவிடும். கிருஷ்ணவகை சமுதாயத்தினர் அதிகமாகஉள்ள குளச்சலில், இந்துநாடார் வாக்குகளையும் சேர்த்துபெற பாஜக வேட்பாளர் கடுமையாக உழைக்கிறார். குமரி மாவட்டத்தில்பாஜக வெற்றிக் கணக்கை தொடங்கதிட்டமிட்டிருக்கும் தொகுதியில் குளச்சலும்ஒன்று. கூட்டணி கட்சியான அதிமுகவும் முழுஈடுபாட்டுடன் தேர்தல் பணியில் ஈடுபட்டால்குளச்சல் தொகுதியில் போட்டி கடுமையானதாக இருக்கும்.

எந்தப்பக்கம் சாயும் என்று அறியமுடியாத மதில்மேல் பூனையாக குளச்சலில் வெற்றி இருக்கிறது.

இதுவரை குளச்சல்

1954-ம் ஆண்டில் இருந்து கடந்த 2016 தேர்தல் வரை குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி 9 முறை வெற்றிபெற்றுள்ளது. அதிமுக, திமுக ஆகியவை தலா இரு முறை வென்றுள்ளன. கடந்த 2011, 2016 ஆகிய இரு தேர்தல்களிலும் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு ஜே.ஜி.பிரின்ஸ் எம்.எல்.ஏ. ஆனார்.

கடந்த தேர்தலில் பிரின்ஸ் 67,197 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தார். அதற்கு அடுத்த இடத்தை பாஜக வேட்பாளர் குமரி ரமேஷ் பெற்றார். அவர் 41,167 வாக்குகள் பெற்றிருந்தார். 3-வது இடத்தை 39,218 வாக்குகளுடன் அதிமுகவின் கே.டி.பச்சைமால் பெற்றிருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in