வாஷிங்மெஷின் செயல்படுத்த முடியாத ஏமாற்று திட்டம் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கருத்து

வேலூர் அடுத்த சேண்பாக்கம் பகுதியில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு நேற்று வாக்கு சேகரித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் அடுத்த சேண்பாக்கம் பகுதியில் காட்பாடி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகனுக்கு நேற்று வாக்கு சேகரித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி. படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
2 min read

அதிமுகவினர் வாஷிங்மெஷின் கொடுப்போம் என செயல்படுத்த முடியாத திட்டங்களை கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடிதொகுதிக்கு உட்பட்ட சேண்பாக்கத்தில் திமுக வேட்பாளர் துரைமுருகனை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ் அழகிரி நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது, ‘‘இன்றைய அரசியலின் முக்கிய புள்ளியாக துரைமுருகன் திகழ்கிறார். அவரின் சிறப்பம்சம் என்னவென்றால், இத்தனை ஆண்டுகளாக ஒரேகட்சியில் இருப்பதால் அவர் கொள்கை வீரனாக விளங்கி வருகிறார். எம்ஜிஆர் அழைத்தும் கூட போகாதவர் துரைமுருகன். தன்னுடைய உழைப்பு அனுபவத்தின் மூலம் உயர்ந்து தற்போது ஒரு பெரிய இயக்கத்துக்கு பொதுச் செயலாளராக உயர்ந்துள்ளார்.

திமுக கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கை தமிழக வளர்ச்சிக்கானது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை தருவதாக சொல்கிறார். தற்போது, அரசாங்கத்தில் வேலையே இல்லை. வாஷிங்மெஷின் கொடுப்போம் என செயல் படுத்த முடியாத திட்டங்களை கூறி ஏமாற்றுகிறார்கள்.

சட்டத்துக்கு புறம்பான ஆட்சியாக தற்போதைய ஆட்சி உள்ளது. டெண்டர் முறைகேட்டில் சிபிஐ விசாரணை முறையாக நடைபெற்றிருந்தால் எடப்பாடி பழனிசாமி இன்றைக்கு முதல்வராக இருந்திருக்க முடியாது. தமிழக மக்கள் திமுக கூட்டணிக்கு ஆதரவு தர வேண்டும்’’ என்றார்.

சோளிங்கரில் பிரச்சாரம்

சோளிங்கர் சட்டப்பேரவைத் தொகுதி காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஏ.எம்.முனிரத்தினத்தை ஆதரித்து சோளிங்கரில் நேற்று முன்தினம் இரவு பிரச்சாரம் நடைபெற்றது.

அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி பேசும்போது, ‘‘இந்த தேர்தலில் எடப்பாடியை அகற்றிவிட்டு மு.க.ஸ்டாலினை அமர வைப்பது மட்டும் நோக்கமல்ல. அந்த இடத்தில் எடப்பாடி இருக்க வேண்டுமா? அல்லது ஸ்டாலின் இருக்க வேண்டுமா? என்று யோசிப்பதுதான் நோக்கம். எடப்பாடி பழனிசாமி முதல்வராக ஒரு ஏலத்தின் மூலம் வந்தவர். ஸ்டாலின் கடந்த 1970-ல் கிளை செயலாளராக அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்து, வளர்ந்து தற்போது இந்த இடத்துக்கு வந்துள்ளார்.

எடப்பாடி பழனிசாமி எப்படி ஊர்ந்து வந்தாரா, தவழ்ந்து வந்தாரா? என்பது எல்லாம் தெரியாது. ஆனால், அவர் முறையாக அந்த பதவியை பெறவில்லை. எனவே, இது முக்கியமான தேர்தல். நமது தேர்தல் அறிக்கையில் தமிழக வளர்ச்சியை பற்றி சொல்கிறது. காமராஜர் முதல்வராக இருந்தபோது தன்னுடைய முதல் 5 ஆண்டு காலத்தில் 12,500 ஆரம்ப பாடசாலையை ஆரம்பித்தார். அதனால்தான் கல்வியில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. அந்த அடித்தளத்தை ஸ்டாலின் பலமாக்குவார். சுதந்திர இந்தியாவில் இவ்வளவு பெரிய விலைவாசி உயர்வு வந்தது கிடையாது. பெட்ரோல் விலை ரூ.100 விற்கிறது.

இதற்கு, காரணம் மோடி அரசால் சிறந்த பொருளாதார கொள்கையை கொண்டு வர முடியாதது. பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வால் அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்துவிட்டது. துக்ளக் ஆட்சியைத் தான் மோடி நடத்துகிறார். நாட்டின் பொருளாதாரத்தை தலைகீழாக மாற்றி விட்டார் மோடி. தமிழத்தை தமிழகம் ஆள வேண்டுமா? அல்லது புதுடெல்லி ஆள வேண்டுமா? என்பதுதான் பிரச்சினை. இதில் தமிழர்களின் சுய மரியாதை மதிப்பும் அடங்கி இருக்கிறது’’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in