

எந்த மந்திரம் சொன்னால் கேஸ் விலை குறையும் என்பதை தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும் என தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மதுரை மக்களவைத்தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் பேசினார்.
திருப்பரங்குன்றத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளருக்கு ஆதரவாக ‘வேட்பாளர் செயலி’ அறிமுகப்படுத்தப்பட்டது.
அதனையொட்டி சமையல் எரிவாயு விலையேற்றத்தை உணர்த்தும் வகையில் 12 அடி உயர சிலிண்டர் கட் அவுட் மூலம் நூதனப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
திருப்பரங்குன்றம் தொகுதியில் திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் பொன்னுத்தாய் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் வேட்பாளர் ராஜன் செல்லப்பா போட்டியிடுகிறார்.
இதில் அதிமுக வேட்பாளர், அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஆறு சிலிண்டர்கள் இலவசம் என்பதை உணர்த்தும் வகையில் சிலிண்டர் கட்-அவுட்டுடன் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
அதற்கு பதிலடி தரும் வகையில் மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு ஆதரவாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சமையல் எரிவாயு விலையேற்றத்தை உணர்த்தும் வகையில் இன்று திருப்பரங்குன்றத்தில் நூதனப் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
இதில் 12 அடி உயர கேஸ் சிலிண்டருடன் பிரச்சாரம் செய்தனர். இதில் வேட்பாளர் விவரம், தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய ‘பொன்னுத்தாய் டிபிகே எனும் வேட்பாளர் செயலி’ யையும் வெளியிட்டனர்.
இதற்கான கூட்டம் ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்வா தலைமையில் நேற்று மாலையில் நடைபெற்றது. அச்சங்கத்தின் மாநில செயலாளர் பாலா முன்னிலை வகித்தார். இதனை மதுரை மக்களவைத்தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் துவக்கி வைத்து பிரச்சாரம் மேற்கொண்டார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் எஸ்.பொன்னுத்தாயின் பிரச்சாரம், வாக்காளர்கள் தெரிவிக்க விரும்பும் கோரிக்கைகள், எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து தெரிவிக்க tinyurl.com/ ponnuthai4tpk என்ற செயலி அறிமுகப்படுத்தபட்டது.
இதனை துவக்கி வைத்து சு.வெங்கடேசன் எம்.பி பேசியதாவது: காயத்திரி மந்திரம் சொன்னால் கரோனா வைரஸ் குறையுமா? என்பது குறித்து ரிஷகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் ஆய்வு நடத்த போவதாக செயதிகள் வெளியாகியுள்ளது.
எந்த மந்திரம் சொன்னால் எரிவாயு விலை குறையும் என்பதை திருப்பரங்குன்றம் வாக்காளர்களுக்கும் தமிழக வாக்காளர்களுக்கும் பிரதமர் மோடி தெரிவிக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளால் சிலிண்டர் விலை உயரந்து கொண்டே செல்கிறது.
ஆனால் இலவசமாக 6 சிலிண்டர்கள் கொடுக்க போவதாக முதல்வர் பழனிசாமி கூறுகிறார். முதல்வரின் அறிவிப்புக்கும், பிரதமர் மோடியின் நடவடிக்கைக்கும் உள்ள ஏமாற்று வேலையை தமிழக மக்கள் நம்பக்கூடாது, என்றார்.