Last Updated : 23 Mar, 2021 07:12 PM

 

Published : 23 Mar 2021 07:12 PM
Last Updated : 23 Mar 2021 07:12 PM

திருவெறும்பூர் தொகுதி பிரச்சாரத்தில் 'ஜல்லிக்கட்டை' வைத்து மல்லுக்கட்டும் வேட்பாளர்கள்; உடனடி அனுமதி, முழுச் செலவும் ஏற்பு, அரசு வேலை என வாக்குறுதிகள் ஏராளம்

ஜல்லிக்கட்டுக் காளையுடன் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

திருச்சி

திருவெறும்பூர் தொகுதி பிரச்சாரத்தில் அதிமுக, திமுக ஆகிய 2 கட்சிகளின் வேட்பாளர்களும் ஜல்லிக்கட்டு தொடர்பான அடுக்கடுக்கான வாக்குறுதிகளை அளித்து வருவது அங்குள்ள கிராம மக்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி நகர்ப்புறமும், கிராமப்புறமும் கலந்து காணப்படுகிறது. இங்குள்ள பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுக்குத் தனி மவுசு காணப்படுகிறது. குறிப்பாக, சூரியூர், நவல்பட்டு, கூத்தைப்பார், துவாக்குடி, சின்ன சூரியூர், நத்தமாடிப்பட்டி, கிழக்குறிச்சி, காந்தலூர், பொன்மலைப்பட்டி, நடராஜபுரம், குமரேசபுரம், பொய்கைக்குடி, கல்கண்டார்கோட்டை, வேங்கூர், அரசங்குடி, காட்டூர், வீதிவடங்கம், வாழவந்தான்கோட்டை, திருவெறும்பூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் காலங்காலமாக ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது.

பிரதான வாக்குறுதி

2009-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு முறைப்படுத்தும் சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு, அதில் குறிப்பிடப்பட்டுள்ள டெபாசிட் தொகை, இரண்டடுக்கு தடுப்பு உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகள் மற்றும் அனுமதி பெறுவதிலுள்ள சிக்கல் போன்றவற்றால் இங்குள்ள பல கிராமங்களில் ஜல்லிக்கட்டு நிறுத்தப்பட்டு விட்டது.

சூரியூர், கூத்தைப்பார், துவாக்குடி உள்ளிட்ட சில இடங்களில் மட்டும் உள்ளூர் அரசியல்வாதிகள், தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் அந்த கிராம மக்கள் ஜல்லிக்கட்டினைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், தற்போதைய சட்டப்பேரவைத் தேர்தலில் ஜல்லிக்கட்டு விவகாரம் இத்தொகுதியின் பிரதான வாக்குறுதியாக மாறியுள்ளது. அதிமுக வேட்பாளர் ப.குமார், திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர், ஜல்லிக்கட்டு காளையுடன் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். மேலும், பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடந்த கிராமங்களில் ஜல்லிக்கட்டு காளைகளைக் கொண்டு இந்த 2 வேட்பாளர்களுக்கும் வரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

ஜல்லிக்கட்டு காளை சிலை

இதனால் உற்சாகமடைந்த அதிமுக வேட்பாளர் ப.குமார், பிரச்சாரத்துக்கு செல்லுமிடங்களில், "திருவெறும்பூர் தொகுதியில் பாரம்பரியமாக ஜல்லிக்கட்டு நடத்தி வந்த அனைத்து கிராமங்களிலும், அதைத் தொடர்ந்து நடத்திட வழி செய்வேன். இதற்கான அனுமதியை உடனடியாகப் பெற்றுத் தருவேன். இத்தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான செலவினை நானே ஏற்பேன். ஜல்லிக்கட்டில் சிறந்து விளங்கும் வீரருக்கு அரசு வேலை வழங்கிட சட்டப்பேரவையில் குரல் கொடுப்பேன். ஜல்லிக்கட்டு மீட்புப் போராட்டத்தை நினைவுகூரும் வகையில் இத்தொகுதியில் ஜல்லிக்கட்டுக் காளையின் சிலை அமைப்பேன்" என வாக்குறுதி அளித்து வருகிறார்.

ஜல்லிக்கட்டு காளையுடன் அதிமுக வேட்பாளர் ப.குமார்.

மாடுபிடி வீரர்களுக்கு இலவசக் காப்பீடு

இதேபோல, திமுக வேட்பாளரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனது பிரச்சாரத்தின்போது, "திமுக ஆட்சி வந்தவுடன் திருவெறும்பூர் தொகுதியில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கான செலவுகளை நானே ஏற்றுக் கொள்வேன். திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளபடி ஜல்லிக்கட்டு மாடு வளர்ப்போருக்கு மாதந்தோறும் ரூ.1,000 பெற்றுத் தருவேன். இத்தொகுதியில் வசிக்கும் மாடுபிடி வீரர்களுக்கு இலவசக் காப்பீடு செய்து தருவேன். அரசின் மூலம் ஊக்கத்தொகை கிடைக்க வலியுறுத்துவேன்" எனக் கூறி வருகிறார்.

ஒரு ஜல்லிக்கட்டுக்கு ரூ.15 லட்சம்

இதுகுறித்து, ஜல்லிக்கட்டு ஆர்வலரான டி.ராஜேஷ் கூறும்போது, "திருவெறும்பூர் தொகுதியில் மட்டும் சுமார் 3,000 ஜல்லிக்கட்டுக் காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. விவசாயத்தை நம்பியுள்ள இம்மக்களிடம் காளை வளர்ப்பும், ஜல்லிக்கட்டும் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

தற்போதுள்ள நிபந்தனைகளைப் பின்பற்றி ஒரு ஜல்லிக்கட்டு நடத்தி முடிக்க குறைந்தபட்சம் ரூ.15 லட்சம் செலவாகும். அதை ஏற்றுக் கொள்வதாகக் கூறுவதும், விடுபட்ட கிராமங்களில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்றுத் தருவதாகக் கூறுவதும் உண்மையிலேயே வரவேற்கக்கூடிய அறிவிப்புகள்.

தேர்தல் வெற்றிக்காக வேட்பாளர்கள் இந்த அறிவிப்புகளை வெளியிட்டிருந்தாலும், தொகுதி மக்களிடம் இதன் தாக்கத்தைக் காண முடிகிறது. அதிமுக, திமுக என யார் வெற்றி பெற்றாலும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு அளிப்பர் என்பதால் பல கிராமங்களில் மக்கள் மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் உள்ளனர்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x