ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்  

ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன்  
Updated on
1 min read

உச்ச மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் குறித்து ஆபாசமாகப் பேசி வீடியோ வெளியிட்ட புகாரில் கைதான ஓய்வுபெற்ற நீதிபதி சி.எஸ்.கர்ணனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது.

சென்னை மற்றும் கொல்கத்தா உயர் நீதிமன்றங்களில் நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வுபெற்ற சி.எஸ்.கர்ணன், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகள், முன்னாள் நீதிபதிகள், அவர்களது குடும்பத்தினர், பெண் வழக்கறிஞர்கள், பெண் பணியாளர்கள் ஆகியோரை அவதூறாகப் பேசி பல வீடியோக்களை வெளியிட்டார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பாகவும், வழக்கறிஞர் தேவிகா கொடுத்த புகாரின் அடிப்படையிலும் கடந்த ஆண்டு டிசம்பர் 2ஆம் தேதி சென்னை மாநகரக் காவல்துறையினரால் நீதிபதி கர்ணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது 10 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன.

இவரது 10 ஜாமீன் மனுக்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏற்கெனவே தள்ளுபடியான நிலையில், நீதிபதி கர்ணன் மீண்டும் 10 மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார். அந்த ஜாமீன் மனுக்களை நீதிபதி வி.பாரதிதாசன் விசாரித்தபோது, தற்போதைய மற்றும் முன்னாள் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் பற்றி அவதூறாகப் பேசமாட்டேன் என்றும், ஊடகம், பத்திரிகை, சமூக ஊடகம் என எதிலும் பதிவேற்றம் செய்ய மாட்டேன் என்றும் நீதிபதி கர்ணன் உத்தரவாதம் அளித்திருந்தார்.

அதனை ஏற்று இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், 10 வழக்குகளிலும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார். சென்னையில் தங்கியிருக்க வேண்டும், சாட்சிகளை கலைக்கக் கூடாது, விசாரணைக்குத் தேவைப்படும்போது ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

50 ஆயிரம் ரூபாய்க்கான இரு நபர் உத்தரவாதத்தை ஜாமீன் பெற்றுக்கொள்ள உத்தரவிட்டுள்ளார். நிபந்தனைகளை மீறும் பட்சத்தில் ஜாமீன் ரத்து செய்யப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in