

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் குடியுரிமைச் சட்டங்களால் தமிழகத்தில் அதிமுக, பாஜகவுக்கு எதிர்ப்பு அலை வீசுவதாக தமிழக காங்கிரஸ் மேலிட பார்வையாளர் சஞ்சய்தத் தெரிவித்தார்.
திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
தமிழக முதல்வர் தன்னை ஒரு விவசாயி என்று சொல்கிறார். ஆனால் விவசாயிகளுக்கு எந்த நன்மைகளையும் அவர் செய்யவில்லை.
விவசாயிகளுக்கு எதிராக மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்தது. மேலும் குடியுரிமை சட்டத்துக்கு மாநிலங்களவையில் அதிமுக அரசு ஆதரவு தெரிவித்தது.
ஆனால் இப்போது அதை எதிர்ப்பதாக நாடகம் ஆடுகிறார்கள். தமிழகத்தில் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு பறிக்கப்படுகிறது. மாநில மொழி புறக்கணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை பாஜக அரசு புகுத்தி வருகிறது. இதை அதிமுக தட்டிக்கேட்காமல் தலையாட்டி பொம்மையாக செயல்படுகிறது.
இரண்டு அரசுகளும் தமிழக மக்களை வஞ்சிக்கிறது. மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக தமிழகத்தில் அலை வீசுகிறது. இதனால் தமிழகத்தில் திமுக, காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றிபெறும்.
தேர்தல் பிரச்சாரத்துக்காக ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் தமிழகம் வரவுள்ளனர் என்று தெரிவித்தார்.
முன்னாள் மத்திய இணையமைச்சர் தனுஷ்கோடி ஆதித்தன், மாவட்ட தலைவர் சங்கரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.