இலங்கைக்கு எதிராக வாக்களிக்காத இந்திய அரசு; மன்னிக்க முடியாத பச்சை துரோகம்: வைகோ கண்டனம்

வைகோ: கோப்புப்படம்
வைகோ: கோப்புப்படம்
Updated on
1 min read

ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு துரோகம் இழைத்துவிட்டதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ இன்று (மார்ச் 23) வெளியிட்ட அறிக்கை:

"இலங்கைத் தீவில் சிங்கள இனவாத அரசு, ஈழத் தமிழர்களுக்கு எதிராக நடத்தியது போர்க் குற்றம் அல்ல, அப்பட்டமான இனப்படுகொலை. 1 லட்சத்து 37 ஆயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர். மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மீது குண்டுகள் வீசப்பட்டன. 2009-ம் ஆண்டின் தொடக்கத்தில், தமிழர்களைப் பட்டினி போட்டுக் கொன்றது இலங்கை அரசு.

இதுகுறித்து, சர்வதேச சமுதாயம் தன் கடமையில் இருந்து தவறியது. எனினும், அண்மையில் பிரிட்டன், ஜெர்மனி, கனடா, வடக்கு மாசிடோனியா, மாண்டினிரோ, மலாவி ஆகிய ஆறு நாடுகள் இலங்கையின் போர்க் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சிலில் தீர்மானம் கொண்டுவந்தன. இந்திய அரசு, இலங்கையை ஆதரிக்கும் என்று இலங்கை வெளிவிவகாரத் துறைச் செயலாளர் ஜெயநாத் கொலம்பிகே நான்கு நாட்களுக்கு முன்பு கூறினார்.

அதேபோல இன்று, இந்திய அரசின் பிரதிநிதி வாக்கெடுப்பில் பங்கெடுக்காமல் வெளிநடப்பு செய்தார். இது ஈழத் தமிழர்களுக்கு இந்திய அரசு செய்த மன்னிக்க முடியாத பச்சை துரோகம் ஆகும்.

தமிழ்நாட்டில் தேர்தல் நடப்பதால், ஏமாற்றுவதற்காக வெளிநடப்பு செய்தார்கள். இல்லையேல், இலங்கைக்கு ஆதரவாகவே ஓட்டுப் போட்டு இருப்பார்கள். இந்திய அரசு செய்த துரோகத்துக்கு என்னுடைய பலத்த கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்".

இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in