Published : 23 Mar 2021 06:03 PM
Last Updated : 23 Mar 2021 06:03 PM

அதிமுக எம்.பி. முகமது ஜான் திடீர் மரணம்: மாரடைப்பால் உயிர் பிரிந்தது

சென்னை

அதிமுக மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான முகமது ஜான், சொந்த ஊரான ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.

அதிமுகவில் தற்போது மாநிலங்களவை உறுப்பினராக முகமது ஜான் இருந்தார். கடைசியாக 2019-ம் ஆண்டு மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் முகமது ஜான் தேர்வு செய்யப்பட்டார். இது தவிர 2020-ல் இவர் தமிழ்நாடு வஃக்பு போர்டு தலைவராகவும் நியமிக்கப்பட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி ராணிப்பேட்டையில் கட்சிப் பணியில் ஈடுபட்டு வந்த அவர், தொடர்ச்சியாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். கட்சிப் பிரச்சாரத்தை முடித்துக்கொண்டு மதியம் வீட்டுக்கு வந்தவர் உணவருந்திய பின்னர் ஓய்வில் இருந்தபோது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆனால், அவர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே காலமானார்.

முகமது ஜான் தொழிலதிபர் ஆவார். அதிமுகவில் ராணிப்பேட்டை நகராட்சிக்கு 1996-2001 வரையிலும், பின்னர் 2001-2006 வரையிலும் தேர்வு செய்யப்பட்டார். பின்னர் 2011ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து, அதிமுக சார்பாகப் போட்டியிட்டு வென்றார். 2011 ஜெயலலிதா அமைச்சரவையில் மாநிலப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக இருந்தார்.

பின்னர் 2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்ட அவர் திமுக சார்பில் போட்டியிட்ட ஆர்.காந்தியிடம் தோல்வியடைந்தார். அதன் பின்னர் 2019ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். 2025 வரை அவரது பதவிக் காலம் உள்ள நிலையில், இன்று உடல்நலக் குறைவால் திடீரென்று உயிரிழந்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x