

"நானும் விவசாயிதான்" எனக் கூறி கிராமங்களில் வாக்குகளைப் பெற புதுப்புது முறைகளை வேட்பாளர்கள் கையாளுகின்றனர். புதுச்சேரியில் முக்கியத் தொழில் விவசாயம். தற்போது தேர்தல் காலம் என்பதால் வேட்பாளர்கள் வாக்குகள் வேண்டி பிரச்சாரத்தில் ஈடுபடுகின்றனர்.
கிராமங்கள் அதிக அளவுள்ள தொகுதிகளில் தற்போது நேரடியாக விவசாயக் களத்துக்கே வேட்பாளர்கள் சென்று விடுகின்றனர். வாக்காளர்கள் தங்களுக்காக வாக்குகளைக் கோரினாலும் வேலையே முக்கியம் என கிராமத்தில் உள்ள விவசாயிகள் பணியில் மும்முரமாக இருக்கின்றனர். வாக்காளர்களைக் கவர புதுப்புது முறைகளை வேட்பாளர்கள் கையாளுகின்றனர். குறிப்பாக "நானும் விவசாயிதான்" எனக் குறிப்பிட்டு அவர்களுடன் அமர்ந்து அவர்கள் செய்யும் பணியைச் செய்கின்றனர்.
புதுச்சேரி கிராமப் பகுதியிலுள்ள மண்ணாடிப்பட்டு தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் முன்னாள் அமைச்சர் நமச்சிவாயம் திருக்கனூர் கிராமத்தில் விவசாய நிலத்தில் விவசாயிகளிடம் வாக்குச் சேகரித்தார். அங்கு நிலக்கடலை பறித்த விவசாயிகளுடன் பேசினார். அவர்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட்டதால், அவர்களுடன் அமர்ந்து நிலக்கடலையை ஆய்ந்துகொண்டு உரையாடினார். அவர்களின் கேள்விகளுக்கு பதில் தந்தவாறு தனக்கு வாக்களிக்கக் கோரினார்.
ஏம்பலம் தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளரான முன்னாள் அமைச்சர் கந்தசாமி கோர்காடு கிராமத்தில் வாக்கு சேகரித்துக் கொண்டு இருந்தார். அப்போது அவ்வழியே வந்த டிராக்டரில் ஏரி அமர்ந்தார். ஒரு கையில் டிராக்டர் கம்பியைப் பிடித்தபடி, மறுகையில் நோட்டீஸ் விநியோகித்து வாக்கு சேகரிக்கத் தொடங்கினார்.
மணவெளி தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் அனந்தராமன் திம்மநாயக்கன் பாளையம் கிராமத்தில் வாக்குச் சேகரித்தபோது விவசாயிகள் பணியில் மும்முரமாக இருந்தனர். இதையடுத்து உடனடியாக வயலில் இறங்கி களை எடுக்கத் தொடங்கினார். இதுபோல் ஒவ்வொரு வேட்பாளரும் ஒவ்வொரு விதமாக வாக்குகளைப் பெற புதுப்புது முறைகளைக் கையாளத் தொடங்கியுள்ளனர்.