Last Updated : 23 Mar, 2021 04:31 PM

 

Published : 23 Mar 2021 04:31 PM
Last Updated : 23 Mar 2021 04:31 PM

கரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தால், அது ஜனநாயகப் படுகொலை: இரா.முத்தரசன்

கரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்திவைத்தால், அது ஜனநாயகப் படுகொலை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

மேலும், ‘‘மோடி எந்த அளவிற்கு பிரச்சாரம் செய்கிறாரோ, அந்த அளவிற்கு எங்களின் வெற்றி எண்ணிக்கை கூடும்,’’ என்றும் அவர் கூறினார்.

சிவகங்கையில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மாநில அரசு மத்திய அரசுக்கு அடிமையாக இல்லை. கொத்தடிமையாக உள்ளது. பழனிசாமி, முதல்வர் பழனிசாமியாகத் தான் பேசுகிறார், அவர் மனசாட்சியாகப் பேசவில்லை. அவர் முதல்வராக பேசுவது இதுவே கடைசி.

பழனிசாமி யார் மூலம் முதல்வரானார் என்பதை நினைத்துப், பேச வேண்டும். கூவத்தூரில் என்ன நடந்தது என்பது அனைத்து மக்களுக்கும் தெரியும்.

அதிமுகவினர் இஸ்லாமிய மக்களுக்கு இணக்கமானவர்கள் என்பது போல் முதல்வர் பேசுகிறார். ஆனால் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான குடியுரிமைச் சட்டத்திற்கு ஆதரவளித்தது அவர்கள்தான்.

தமிழகத்தில் மிகப்பெரிய அலை உருவாகியுள்ளது. அது 10 ஆண்டுகால அதிமுக அரசுக்கும், மத்திய பாஜக அரசுக்கும் எதிரான அலை. எங்களுக்கு கருத்துக் கணிப்பு மீது நம்பிக்கை இல்லை. கருத்துக் கணிப்பில் வந்ததைவிட அதிக இடங்களில் எங்களது கூட்டணி வெற்றிபெறும்.

அதிமுக அனைத்துத் தொகுதிகளுக்கும் பணம் அனுப்பி வைத்துள்ளது. தேர்தல் ஆணையம் நேர்மையான முறையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கரோனாவை காரணம் காட்டி தேர்தலை ஒத்துவைத்தால், அது ஜனநாயகப் படுகொலை. மேலும் அதிமுக வேட்பாளர்கள் பலர் வித்தியாசமான முறையில் பிரச்சாரம் செய்கின்றனர். அதைப் பார்த்து மக்கள் கேலி செய்கின்றனர்.

திராவிட, கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தேவை இன்னும் பூர்த்தியடையவில்லை. இதனால் அந்த இயக்கங்கள் தொடரும். இந்நிலையில் அந்த இயக்கங்கள் அழிந்துவிடும் என முதல்வர் கூறுவது அரசியல் முதிர்ச்சியின்மையையே காட்டுகிறது.

தமிழக மக்கள் மோடியை விரும்பவில்லை. மோடி எந்த அளவிற்கு பிரச்சாரம் செய்கிறாரோ, அந்த அளவிற்கு எங்களின் வெற்றி எண்ணிக்கை கூடும், என்று கூறினார்.

சிவகங்கை தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ்.குணசேகரன், மாவட்டச் செயலாளர் கண்ணகி உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x