Published : 23 Mar 2021 04:37 PM
Last Updated : 23 Mar 2021 04:37 PM

கே.பி.முனுசாமி அதிமுகவில் இருப்பதைவிட பாமக ஏஜெண்டாக சிறப்பாகச் செயல்படுகிறார்: ஸ்டாலின் பேச்சு

இதுவரையில் இருந்த அரசுகளிலேயே ஊழல் மிகுந்த அரசு 1991-96-இல் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுக தான். ஆனால் இப்போது அதையெல்லாம் தாண்டி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சிதான் படுபயங்கரமான ஊழல் ஆட்சியாக இருக்கிறது என ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

வேப்பனஹள்ளியில் இன்று பொதுமக்களிடையே திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக பிரச்சாரம் செய்த ஸ்டாலின் பேசியதாவது:

“ஜெயலலிதா உயிரோடு இருந்தபோது, பொதுக்குழு நடந்த நேரத்தில் அதிமுகவைச் சேர்ந்த பொதுக்குழு உறுப்பினர்கள் கோஷமிட்டார்கள். அதற்குப் பிறகு ஜெயலலிதா அருகில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, ‘கே.பி.முனுசாமியைப் பற்றிதான் கோஷமிடுகிறார்கள். எல்லாவற்றிலும் 30 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார். அதனால் அவருக்கு 30 சதவிகிதம் முனுசாமி என்று பட்டம் சூட்டி இருக்கிறார்கள்’ என்று சொன்னார்கள்.

அடுத்த நிமிடமே அவரது அமைச்சர் பதவியை அம்மையார் பறித்துவிட்டார். இப்போது அவர் மறைவிற்குப் பிறகு அவருக்கு ஒரு புது வாழ்க்கை கிடைத்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. அதை விசாரிக்க வேண்டும் என்று சொல்லி அவருடைய நினைவிடத்தில் தியானம் செய்து பத்திரிகையில் பேட்டி கொடுத்தார். அவருடன் கே.பி.முனுசாமி ஒட்டிக்கொண்டார்.

அதற்குப் பிறகு இதே கிருஷ்ணகிரியில் 2018 மார்ச் மாதம் உண்ணாவிரதம் இருந்தார். அந்த உண்ணாவிரதத்தில் வீர வசனம் பேசினார். அதன்பிறகு கட்சியில் பதவி கொடுத்தார்கள். எம்.பி. பதவியும் கிடைத்தது. அந்தப் பதவிகள் கிடைத்தவுடன் ஜெயலலிதா மரணத்தைப் பற்றி வாய் திறக்கவில்லை. அதைப்பற்றி மறந்துவிட்டார்.

எனவே பன்னீரையும், பழனிசாமியையும் மிரட்டிப் பதவி வாங்கி விட்டார். அதற்குப் பிறகு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஆளுங்கட்சி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட அவர் அந்தத் தேர்தலில் படுதோல்வி அடைந்தார்.

மீண்டும் அவருக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி கொடுத்து இருக்கிறார்கள். இதற்கிடையில் இப்போது எம்.எல்.ஏ. சீட் கொடுத்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவரை நாம் தோற்கடிக்க வேண்டுமா? வேண்டாமா? கே.பி.முனுசாமி அதிமுகவுக்குத் துணை நிற்கிறாரோ இல்லையோ. பாமகவுக்கு ஒரு ஏஜெண்டாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ஜெயலலிதாவின் மரணத்தைப் பற்றி விசாரணை வேண்டும் என்று சொல்லி இதே கிருஷ்ணகிரியில் உண்ணாவிரதம் இருந்தபோது, “ஜெயலலிதாவின் மரணத்தை வெளிக் கொண்டு வரும் முயற்சியில் யாராவது ஈடுபடவில்லை என்றால் அவர்கள் அரசியலில் இருந்து காணாமல் போய் விடுவார்கள்” என்று சொன்னவர் அவர். அவ்வாறு சொன்ன கே.பி.முனுசாமி இந்தத் தேர்தலில் காணாமல் போகப் போகிறார். அதுதான் உண்மை. அதுதான் உறுதி.

இதுவரையில் இருந்த அரசுகளிலேயே ஊழல் மிகுந்த அரசு 1991-96-இல் ஆளுங்கட்சியாக இருந்த அதிமுகதான். ஆனால், இப்போது அதையெல்லாம் தாண்டி பழனிசாமி தலைமையில் நடந்து கொண்டிருக்கும் இந்த ஆட்சி தான் படுபயங்கரமான ஊழல் ஆட்சியாக இருக்கிறது.

கமிஷன் - கரப்ஷன் – கலெக்‌ஷன் இதனையே தொழிலாகக் கொண்டு ஆட்சி நடத்திக் கொண்டிருக்கும் ஒரு கொடிய சர்வாதிகார ஆட்சி இது. அவர்கள் என்ன ஊழல் - எதில் கமிஷன் - எப்படி கலெக்ஷன் செய்கிறார்கள் என்று ஆதாரங்களோடு திமுக சார்பில் ஆளுநரிடத்தில் கொடுத்திருக்கிறோம்''.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x