

காரைக்கால் மாவட்டத்தில், கரோனா தடுப்பு விதிகளுக்குட்பட்டு ஈஸ்டர் பண்டிகையைக் கொண்டாடுவதற்கு மாவட்ட தேர்தல் துறை அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, புதுச்சேரி அரசின் சமாதானக் குழு உறுப்பினரும், காரைக்கால் மாவட்ட கிறிஸ்தவ வாழ்வுரிமை இயக்கப் பொறுப்பாளருமான எல்.எஸ்.பி.சோழசிங்கராயர் இன்று (மார்ச் 23) வெளியிட்டுள்ள அறிக்கை:
"உலகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் புனித விழாவாக ஈஸ்டர் உள்ளது. ஈஸ்டர் கொண்டாட்டத்துக்கு முன்பு 40 நாட்கள் தவக்காலம் தொடங்குகிறது.
தவக்காலம் நிறைவடையும் வாரத்தில் முக்கிய நிகழ்வுகளாக மார்ச் 28-ம் தேதி குருத்தோலை ஞாயிறு, ஏப்.1-ம் தேதி புனித வியாழன், 2-ம் தேதி சிலுவைப் பாதை, 3-ம் தேதி இரவு, 4-ம் தேதி அதிகாலை ஈஸ்டர் கொண்டாட்டம் நடைபெறுகிறது.
காரைக்காலில் தேர்தல் நடைமுறைகள் அமலில் உள்ளதை சுட்டிக்காட்டி, ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் விதமாக திறந்தவெளியில் மக்கள் கூடுவதற்கு மாவட்ட தேர்தல் துறை அனுமதி மறுக்கிறது.
ஈஸ்டர் நிகழ்வு இரவு 10 மணிக்கு மேல் நடைபெறக்கூடியதால், இதனை தேர்தல் பிரச்சார ஓய்வு நேரத்தோடு ஒப்பிடக் கூடாது. இது முழுக்க முழுக்க மதம் சார்ந்த, மக்களின் நம்பிக்கைக்குரிய வழிபாட்டு நிகழ்வாகும். அந்த நாளில் மட்டுமே இதனை நடத்த முடியும்.
எனவே, ஈஸ்டரின் போது பொதுமக்கள் கூடும் நிலையில், உரிய கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்கவும், தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கரோனா பரவல் தடுப்பு முறைகளை பின்பற்றவும் தயாராக உள்ளோம்.
எனவே, ஈஸ்டர் கொண்டாட்டத்தை காரைக்காலில் நடத்துவதற்கு மாவட்ட தேர்தல் துறை அனுமதிக்க வேண்டும்".
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.