

அண்ணாவால் தொடங்கப்பட்ட திமுகவும், எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவும் கொள்கைகளை இழந்து நிற்கின்றன என்று அதிமுக நிறுவன உறுப்பினர் கே.சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சியில் இன்று அதிமுக நிறுவன உறுப்பினரும், முன்னாள் எம்எல்ஏவும், அண்ணா- எம்ஜிஆர் திராவிடக் கூட்டமைப்பின் நிறுவனருமான கே.சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’தமிழ்நாட்டில் பாஜக எந்த வழியில் புகுந்தாலும், ஆமை புகுந்த வீடுபோல் என்று கூறுவதைப்போல் தமிழ்நாடு மாறிவிடும். எனவே, தமிழ்நாட்டில் உள்ள அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து பாஜகவைக் காலூன்றாமல் தடுக்க வேண்டும். இல்லையெனில், தமிழர்களின் எதிர்காலம் அடியோடு அழிந்துவிடும்.
தமிழ்நாட்டில் தங்களது வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் அதிமுக, திமுக ஆகிய கட்சிகளை அகற்றியே தீர வேண்டும் என்ற நோக்கில் பாஜக செயல்படுகிறது. ஆனால், எம்ஜிஆரால் தொடங்கப்பட்டு சுயமரியாதை பேசி வந்த அதிமுக தற்போது தன்மானத்தையும், கொள்கைகளையும் இழந்து நிற்கிறது.
வரலாறு தெரியாதவர்கள் கையில் சிக்கிக் கொண்டுள்ளது. இப்போது இருப்பது உண்மையான அதிமுக அல்ல. பெயர்ப் பலகையில் மட்டுமே உள்ளது. அண்ணா, எம்ஜிஆரை முற்றிலும் மறந்துவிட்டனர். 2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்து தோல்வி அடைந்ததுபோல், இந்தத் தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும்.
பாஜகவைத் தமிழ்நாட்டுக்கு முதன்முதலில் அழைத்து வந்தது திமுகதான். கட்சித் தொடங்கும்போது, உழைக்கிறவர்கள் வாருங்கள், பிழைக்கிறவர்கள் வர வேண்டாம் என்றார் அண்ணா. அந்தத் திமுகவிலும் அண்ணாவின் கொள்கைகள் இல்லை. இப்போது இருப்பவர்கள் யாரென்று அனைவருக்கும் தெரியும்.
வாரிசுகள் நலனுக்கான கட்சியாகத் திமுக மாறிவிட்டது. ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு குறித்து திமுகவினர் பேசுகின்றனர். ஆனால், கருணாநிதி ஆட்சிக் காலத்தில்தான் கோவை சிங்காநல்லூரில் விவசாயிகள் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இந்தச் சூழலில், அதிமுகவைக் காப்பாற்ற வேண்டிய கடமை, அதிமுகவை உருவாக்கியபோது எம்ஜிஆருடன் இருந்த 12 பேரில் ஒருவன் என்பதால் எனக்கு உள்ளது.
தமிழர் கலாச்சாரம், பண்பாடு, மொழி, தன்மானம், சுயமரியாதை ஆகியவற்றைப் பாதுகாக்கும் வகையில், அவரவர் தொகுதியில் போட்டியிடும் நேர்மையான- நல்ல வேட்பாளர்களை அறிந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்.
சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோரது கொள்கைகளை உயர்த்திப் பிடிக்க, தமிழர்கள் நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்’’.
இவ்வாறு அதிமுக நிறுவன உறுப்பினர் கே.சவுந்தரராஜன் தெரிவித்தார்.