

அதிமுகவின் அமைப்பை ஏற்றுக்கொண்டால் சசிகலாவை ஏற்றுக்கொள்வது குறித்து பரிசீலிக்கலாம் என, தமிழக துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சிக்கு அவர் இன்று (மார்ச் 23) பேட்டியளித்தார். அப்போது, அவர் இது தொடர்பான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
கழக ஆட்சி அமைய அரசியலில் இருந்து ஒதுங்குவதாக சசிகலா தெரிவித்துள்ளாரே?
கழக ஆட்சி என்றால் அதிமுக ஆட்சிதான். அதை நினைத்து அவர் சொல்லியிருந்தால் அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். உண்மையில் வரவேற்கிறேன். அதனை அவரது பெருந்தன்மையாகத்தான் நான் பார்க்கிறேன்.
அவர் மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. முதலில் இருந்தே அவர் மீது வருத்தங்கள் இல்லை. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் சில சந்தேகங்கள் பொதுவெளியில் அவர் மீது இருந்தன. சில பிரச்சினைகளில் அவருக்கு அவப்பெயர் உருவாகக்கூடிய சூழல் இருந்தது. அதனால் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வைத்து நிரபராதி என நிரூபித்தால் அவர் மீதிருந்த அவப்பெயர் விடுபடும் என்றுதான் சொன்னேன்.
அவர் மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த சந்தேகமும் இல்லை. நான் சசிகலாவுடன் இருந்திருக்கிறேன். 32 ஆண்டு காலம் அவர் ஜெயலலிதாவுடன் இருந்திருக்கிறார். ஜெயலலிதாவுக்கு வேண்டிய உதவிகளை செய்தார் என்கிற எண்ணம் எங்களுக்கு இருக்கிறது.
ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆணையம் 6 முறை என்னை விசாரணைக்கு அழைத்தார்கள். நான்கு முறை அவர்களாகவே தேதி மாற்றிக்கொண்டார்கள். அப்போது, நான் தயாராகத்தான் இருந்தேன்.
இரு முறை என்னால் வர இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. தற்போது, அப்பல்லோ நிர்வாகம் விசாரணைக்கு தடை பெற்றுள்ளது. மீண்டும் விசாரணை நடைபெறும்போது நான் உண்மையை சொல்வேன்.
சசிகலா மீண்டும் அரசியலுக்கு வந்தால் அவருக்கு அதிமுகவில் இடம் இருக்கிறதா?
அவர்தான் இப்போது அரசியலை விட்டு ஒதுங்கிவிட்டாரே. சிக்கலான கேள்வியை கேட்கிறீர்களே. அதற்கு வாய்ப்பே இல்லை என முதல்வர் கூறியிருக்கிறார். அவர் 4 ஆண்டு காலம் சிறைத்தண்டனை அனுபவித்திருக்கிறார்.
ஜனநாயக முறையில் அதிமுக இயங்குகிறது. தனிப்பட்டவருக்காகவோ, குடும்பத்திற்காகவோ இயங்கவில்லை. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் கட்சி இயங்கிக்கொண்டிருக்கிறது. இந்த அமைப்பை அவர் ஏற்றுக்கொண்டால் அவரை ஏற்றுக்கொள்வதை பரிசீலிக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.