அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதா? - ஆராய்ந்து நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் நடத்தை விதிகள் மீறப்பட்டுள்ளதா? - ஆராய்ந்து நடவடிக்கை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு
Updated on
1 min read

அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா? என ஆராய்ந்து, தேர்தல் முடிவுகள் வெளியான 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் கன்ஸ்யூமர் காஸ் என்ற அமைப்பின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், தேர்தல் நேரங்களில் அரசியல் கட்சிகள் வெளியிடும் தேர்தல் அறிக்கைகள், நடத்தை விதிகளுக்கு உட்பட்டு உள்ளனவா என ஆய்வு செய்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு 2013ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது எனக் கூறியுள்ளது.

2016ஆம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தேர்தல் அறிக்கைகள் மீது 2016 ஆகஸ்ட் மாதத்தில்தான் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டதாகவும், தற்போது உடனடியாக உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டு உள்ளனவா எனத் தேர்தல் முடிவுகள் வெளியான பின், உரிய முறையில் ஆராய்ந்து 2 மாதங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in