அதிமுகவினர் தோல்வி பயத்தில் வன்முறையைத் தூண்டுகின்றனர்: செந்தில்பாலாஜி குற்றச்சாட்டு

செந்தில்பாலாஜி: கோப்புப்படம்
செந்தில்பாலாஜி: கோப்புப்படம்
Updated on
1 min read

கரூர் தொகுதியில் அதிமுகவினர் தோல்வி பயத்தில் அடிதடியில், அராஜகத்தில் இறங்கி வன்முறையைத் தூண்டி வருகின்றனர் என, திமுக வேட்பாளர் செந்தில்பாலாஜி எம்எல்ஏ குற்றம் சாட்டியுள்ளார்.

கரூர், வெங்கமேட்டில் அதிமுக - திமுகவினரிடையே நேற்று முன்தினம் (மார்ச் 21) ஏற்பட்ட மோதலில் திமுகவைச் சேர்ந்த இருவர் காயமடைந்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து கரூர் கலைஞர் அறிவாலயத்தில், திமுக மாவட்டப் பொறுப்பாளரும், கரூர் தொகுதி வேட்பாளருமான வி.செந்தில்பாலாஜி செய்தியாளர்களிடம் இன்று (மார்ச் 22) கூறுகையில், ''கரூர் தொகுதியில் அதிமுகவினர் தோல்வி பயத்தில் அடிதடி, அராஜகத்தில் இறங்கி வன்முறையைத் தூண்டி வருகின்றனர்.

திமுக தொண்டர்கள் கார்த்தி, ரஞ்சித் ஆகிய இருவரையும் நேற்று இரவு அதிமுக நிர்வாகிகள் கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த கார்த்தி, கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிமுக வேட்பாளர் தூண்டுதலின்பேரில் இந்த வன்முறை அராஜகம் நடைபெற்று வருகிறது. நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் ஆளுங்கட்சிக்கு சாதகமாகச் செயல்பட்டு வருகின்றனர்.

அதிமுகவின் வன்முறை அராஜகத்தை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர். அதிமுகவின் அராஜகத்தால் கரூர் தொகுதியில் உயிர் பலி ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் அராஜக வன்முறைச் செயலை தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி, தலைமைத் தேர்தல் ஆணையத்திடம் புகாராக அளிக்க உள்ளோம்" என்றார்.

மேலும், திமுகவினரை அதிமுகவினர் தாக்கிய வீடியோ மற்றும் அதிமுக வேட்பாளர் வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய வீடியோ ஆதாரங்களையும் செந்தில்பாலாஜி வெளியிட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in