Published : 23 Mar 2021 12:09 PM
Last Updated : 23 Mar 2021 12:09 PM

திமுக கூட்டணிக்கு எதிராக வேட்புமனு; விசிக நிர்வாகி நீக்கம்: திருமாவளவன் அறிவிப்பு

சென்னை

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போட்டியிடும் 6 தொகுதிகளை மீறி சுயேச்சையாகப் போட்டியிடும் மண்டல அமைப்புச் செயலாளரைக் கட்சியை விட்டு நீக்குவதாக விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி 1.காட்டுமன்னார்கோயில், 2.செய்யூர், 3.நாகப்பட்டினம், 4.வானூர், 5. அரக்கோணம், 6. திருப்போரூர் ஆகிய 6 தொகுதிகளில் தனிச் சின்னத்தில் போட்டியிடுகிறது.

இதுதவிர மற்ற இடங்களில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் இடங்களை ஆதரிக்க வேண்டும் என்பது முடிவு. இதை மீறி திமுக கூட்டணி போட்டியிடும் திட்டக்குடி தொகுதியில் சுயேச்சையாக கட்சி முடிவை மீறிப் போட்டியிட்டதால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இன்று வெளியிட்ட அறிவிப்பு:

“திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆறு இடங்களில் போட்டியிடுகிறது. விசிகவுக்கு ஒதுக்கப்படாத திட்டக்குடி (தனி) தொகுதியில் மண்டல அமைப்புச் செயலாளர் சு. திருமாறன் என்கிற அய்யாசாமி வேட்புமனுத் தாக்கல் செய்திருக்கிறார் என்பது கட்சித் தலைமையின் கவனத்துக்கு வந்தது.

உடனடியாக அம்மனுவைத் திரும்பப் பெற வேண்டுமென அவருக்குத் தலைமையிலிருந்து அறிவுறுத்தப்பட்டது. ஆயினும், அவர் அவ்வாறு திரும்பப் பெறாமல், சுயேச்சை சின்னத்தைப் பெற்று வேட்பாளராகப் போட்டியிடுவது கட்சியின் நன்மதிப்புக்கு ஊறு விளைவிக்கும் செயலாகும்.

அத்துடன், நாம் அங்கம் வகிக்கும் கூட்டணியின் நல்லிணக்கத்துக்கும் அரசியல் நேர்மைக்கும் எதிரான நடவடிக்கையாகும். கட்சிக்கும், கட்சியின் தலைமைக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டுள்ள திருமாறன் கட்சியின் மண்டலச் செயலாளர் பொறுப்பிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும் நீக்கப்படுகிறார்.

கட்சியின் பொறுப்பாளர்கள் எவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ள திருமாறனுடன் கட்சி சார்ந்து எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என அறிவுறுத்தப்படுகிறது”.

இவ்வாறு திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x