

விவசாயக் களத்தில் துவரைக் கதிர்களை அடித்து விவசாயிகளிடம் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாக்கு சேகரித்தார்.
திருமங்கலம் தொகுதியில் அதிமுக சார்பில் மீண்டும் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்.
திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட சோலைப்பட்டி, அம்மாபட்டி, கீழக்காடனேரி, குமாரபுரம், சாலிச்சந்தை, சொக்கம்பட்டி, பொன்னையாபுரம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அமைச்சர் ஆர்பி. உதயகுமார் தீவிர வாக்கு சேகரித்தார்.
அப்போது சோலைப்பட்டி கிராமத்தில் வாக்கு சேகரிக்க சென்றபோது அங்குள்ள விவசாயிகள் அறுவடை செய்த துவரைக் கதிர்களை அடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம் ஆதரவு திரட்டிய அமைச்சர் ஆர்பி. உதயகுமார் விவசாயிகளுடன் சேர்ந்து அவரும் கதிர் அடித்தார். இதைப்பார்த்த விவசாயிகள் நெகிழ்ச்சியடைந்தனர்.
அப்போது விவசாயிகள் மத்தியில் அவர் பேசுகையில், ‘‘முதல்வர் பழனிசாமி விவசாயக் கடன்களை ரத்து செய்துள்ளது. அவரும் ஒரு விவசாயி என்பதால் விவசாயிகள் கஷ்ட நஷ்டங்களை அறிந்தவர். மீண்டும் என்னை இந்தத் தொகுதியில் தேர்வு செய்வதின் மூலம், பழனிசாமி மீண்டும் முதல்வராகத் தொடர்வார், ’’ என்றார்.