Published : 23 Mar 2021 08:54 AM
Last Updated : 23 Mar 2021 08:54 AM

‘‘அரைநூற்றாண்டு தியாக வரலாறு என்னுடையது, முதல்வர் பழனிசாமியின் வரலாறு அவமானகரமானது’’- ஸ்டாலின் கடும் சாடல்

நெருக்கடி நிலையை எதிர்த்து ஓராண்டு சிறைவாசம் அனுபவித்தது உட்பட பல்வேறு போராட்டங்களைக் கொண்ட அரைநூற்றாண்டு தியாக வரலாறு என்னுடையது, பழனிசாமியின் வரலாறு அவமானகரமானது என திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார்.

ணமு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சார பயணத்தின்போது, ராமநாதபுரத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார். அவர் பேசியதாவது:

வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டப்பேரவைத் பொதுத்தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்களிடத்தில் கேட்பதற்காக தேடி நாடி வந்திருக்கிறேன்.

சேது மன்னர் ஆண்ட மண்ணுக்கு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். எந்த பகையையும் எதிர்கொள்ளும் வீரம் நிறைந்த மண்ணுக்கு நான் வந்திருக்கிறேன். இந்த மண்ணை காக்க பெரும் போரை தன்னுடைய 12-வது வயதில் சேது மன்னர் தொடங்கிய அந்த உத்வேகத்தோடு அந்த உணர்ச்சியோடு இருக்கும் இந்த மண்ணுக்கு நான் உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். 616 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலைவர் கலைஞர் அவர்களால் இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்து, இந்த மாவட்டத்தில் தண்ணீர்ப் பஞ்சத்தைப் போக்கிய தலைவர் கலைஞருடைய மகன் ஸ்டாலின் உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.

இன்றைக்கு தேர்தல் களத்தில் முதல்வர் பழனிசாமி ஏதேதோ உளறிக் கொண்டிருக்கிறார். அவர் ஆட்சியின் சாதனைகளை சொல்லி வாக்குக் கேட்டால் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை.

அவர், உழைத்து உழைத்து முன்னுக்கு வந்தாராம். அதைத் தொடர்ந்து சொல்லுகிறார். மற்றவர்கள் உழைக்கவில்லையாம். அவர் எப்படி உழைத்தார் என்பது நாட்டுக்கே தெரியும். உழைத்து உழைத்து வந்தாரா? ஊர்ந்து ஊர்ந்து வந்தாரா? என்பது உங்களுக்கும் தெரியும். இதற்கு சாட்சி சொல்ல வேண்டியதில்லை. சமூகவலைதளங்களில் அவர் ஊர்ந்து போன காட்சிகள் எல்லாம் வந்தது.

நான் எம்எல்ஏக்களால் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேனே தவிர, வேறு எந்த வகையிலும் நான் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று சொல்லுகிறார். அதை நான் வாதத்திற்கு ஏற்றுக் கொள்கிறேன்.

ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? நீங்கள் அதைச் சொல்லுங்கள். அதை இல்லை என்று நிருபித்து விட்டீர்கள் என்றால் அதற்கு என்ன தண்டனை கொடுத்தாலும் நான் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறேன்.

அதை நான் நிரூபிக்கிறேன். நீங்கள் தண்டனை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறீர்களா? எனவே ஊர்ந்து ஊர்ந்து சென்று இன்றைக்கு ஒரு இடத்தில் உட்கார்ந்து இருக்கிறார். அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை.

உழைத்து உழைத்து வந்தேன் என்று சொல்கிறார். உழைப்பவர் தான் முன்னுக்கு வர முடியும் என்ற ஒரு அரிய கருத்தை சொல்லி இருக்கிறார். நீங்கள் உழைத்த உழைப்பை நாடே பார்த்து கைகொட்டி சிரித்து கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் உழைத்தா வந்தார் என்று அவர் கேட்கிறார். நான் உழைத்துத்தான் வந்தேன் என்பதற்கு என்னுடைய 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கை இன்றைக்கும் சாட்சியாக இருக்கிறது.

முதன்முதலில் 1966-ஆம் ஆண்டு கோபாலபுரம் பகுதியில் அங்கிருக்கும் பள்ளி மாணவர்களை ஒன்று சேர்த்து இளைஞர் தி.மு.க. என்ற ஒரு அமைப்பை தொடங்கியவன் இந்த ஸ்டாலின்.

அதற்குப் பிறகு, 1971-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் நடந்தபோது கழகத்தின் பிரச்சார நாடகம் ‘முரசே முழங்கு’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் நாடகம் நடத்தியவன்தான் இந்த ஸ்டாலின். அதற்குப் பிறகு, 1975-இல் இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட போது, தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்துகொண்டிருந்தது. முதல்வராக கருணாநிதி இருக்கிறார். அப்போது அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து திமுக சார்பில், “அம்மையார் இந்திரா காந்தி அவர்களே… நீங்கள் நெருக்கடி நிலையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நெருக்கடி நிலையைப் பயன்படுத்தி கைது செய்து சிறையில் வைத்திருக்கும் தலைவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்“ என்றுதீர்மானம் போட்டோம்.

அந்த தீர்மானம் போடுவதற்கு முதல் நாள், அம்மையார் இந்திரா காந்தி அவர்கள் டெல்லியில் இருந்து 2 தூதுவர்களை தமிழ்நாட்டிற்கு கலைஞருடைய வீட்டிற்கு கோபாலபுரத்திற்கு அனுப்பிவைத்தார். அவ்வாறு வந்த தூதுவர்கள் கலைஞரைச் சந்தித்து, “நீங்கள் நெருக்கடி நிலையை ஆதரிக்க வேண்டாம். ஆனால் எதிர்க்கக்கூடாது. அவ்வாறு எதிர்த்தால் உங்கள் ஆட்சி அடுத்த வினாடி கவிழ்க்கப்படும்” என்று தூதுவர்கள் சொன்னார்கள்.

அப்போது அந்த தூதுவர்களிடத்தில் கருணாநிதி “நான் பெரியாரால் உருவாக்கப்பட்டவன். பேரறிஞர் அண்ணாவால் வளர்க்கப்பட்டவன். ஆட்சி எனக்கு முக்கியமல்ல. ஜனநாயகம் தான் எனக்கு முக்கியம். உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன். ஜனநாயகத்தைத் தான் காப்பாற்றுவேன்“ என்று சொல்லி அவர்களை அனுப்பிவிட்டு, அடுத்தநாள் சென்னை கடற்கரையில் லட்சக்கணக்கான மக்களை ஒன்றுதிரட்டி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அந்தத் தீர்மானத்தை நிறைவேற்றினார்.

அதை நிறைவேற்றிய பின்னர் 1976-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 31ஆம் நாள் கவிழ்க்கப்பட்டது. அவ்வாறு கவிழ்க்கப்பட்ட பிறகு என்னோடு சேர்த்து 500க்கும் மேற்பட்டவர்கள் மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தோம்.

கொள்ளையடித்தல்ல, லஞ்சம் வாங்கிவிட்டு அல்ல, ஊழல் செய்துவிட்டு அல்ல, ஒரு அரசியல் கைதியாக சர்வாதிகாரத்தை எதிர்த்து போராடியதற்காக அன்றைக்கு கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறையில் இருந்தவன் தான் இந்த ஸ்டாலின் என்பதை பெருமையோடு நான் தெரிவிக்க விரும்புகிறேன்.

அதுமட்டுமா 1981-இல் கைலாசம் கமிஷனை எதிர்த்த காரணத்தால் கைது செய்யப்பட்டு ஒரு மாதம் சிறையில் இருந்தேன். 1984-இல் சட்ட மன்ற அலுவலகத்தில் நடந்த அராஜகத்திற்கு எதிராக போராடிய போது சிறைபிடிக்கப்பட்டேன். 1987-இல் குடிநீர் பிரச்சினைக்காக போராடியதற்கு சிறையில் அடைக்கப்பட்டேன். 1987-இல் மொழிப்போர் காலத்தில் என்மீது பொய் வழக்கு போடப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தேன். 1990-ஆம் ஆண்டு இந்தியாவில் தேசிய முன்னணியின் தொடக்க விழா நடந்தது. அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடந்தது.

அதற்காக ஒரு மிகப்பெரிய பேரணி நடத்தினோம். அந்தப் பேரணியை பார்த்த வடமாநில தலைவர்கள் - அகில இந்திய தலைவர்கள் அத்தனை பேரும் பாராட்டினார்கள். ஏனென்றால் அந்தப் பேரணியை முன்னின்று நடத்தியவன் நான். பிரதமராக இருந்த வி.பி.சிங் அவர்களால் மனதாரப் பாராட்டப்பட்டவன் தான் இந்த ஸ்டாலின் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். 1993-இல் குடிநீருக்காக நடத்திய போராட்டத்தில் சிறைப் பிடிக்கப்பட்டேன், 1994-இல் 69 சதவிகித இடஒதுக்கீட்டிற்காக போராடியதற்காக சிறைப்பிடிக்கப்பட்டேன். 2003-இல் சென்னையில் இருக்கும் ராணி மேரி கல்லூரியை இடிப்பதற்காக அம்மையார் ஜெயலலிதா ஆட்சியில் திட்டமிட்ட போது அதை எதிர்த்து போராடிய காரணத்தால் சிறைபிடிக்கப்பட்டேன்.

இவ்வாறு தியாகத்தால் ஆனது தான் இந்த ஸ்டாலினுடைய அரசியல் வரலாறு. இதுபோல முதல்வர் பழனிசாமிக்கு வரலாறு இருக்கிறதா?

உங்கள் கடந்தகால வரலாற்றை பேச ஆரம்பித்தால் நீங்கள் அந்த பொறுப்பில் இருந்து மாட்டீர்கள். அவ்வளவு அவமானம் அதில் அடங்கி இருக்கிறது. அது மட்டுமல்ல, தலைவர் கருணாநிதி பத்திரிகை நிருபர்கள் ஒருமுறை “உங்கள் மகன் ஸ்டாலினிடத்தில் பிடித்தது என்ன? என்று ஒரு கேள்வியைக் கேட்டார்கள்.

அப்போது கலைஞர் அவர்கள், “என்னுடைய மகன் ஸ்டாலினிடத்தில் பிடித்தது உழைப்பு… உழைப்பு… உழைப்பு…“ என்று பெருமையோடு சொன்னார். அதைத்தான் நான் பெருமையாக கருதுகிறேன்.

தலைவர் கலைஞரால் அவ்வாறு பாராட்டப்பட்டேன். அதைவிட எனக்கு எந்தப் பதவியும் தேவையில்லை.

ஆனால் இன்றைக்கு உழைத்துக் கொண்டிருக்கிறாரா ஸ்டாலின்? என்று ஊர்ந்து போய் காலில் தவழ்ந்து சென்று முதல்வராக இருக்கும் பழனிசாமி கேட்பது தான் விந்தையிலும் விந்தையாக இருக்கிறது.

கடந்த முறை நாடாளுமன்றத் தேர்தல் வந்த நேரத்தில் பிரதமராக இருக்கும் மோடி தமிழ்நாட்டிற்கு வந்தபோது எத்தனையோ உறுதிமொழிகளைத் தந்தார்கள். அந்த உறுதிமொழிகள் இன்றைக்கு காப்பாற்ற பட்டிருக்கிறதா?

அதற்கு ஒரே ஒரு உதாரணம். மதுரையில் இருக்கும் எய்ம்ஸ் மருத்துவமனை. எய்ம்ஸ் மருத்துவமனை என்று சொல்லமுடியாது. எய்ம்ஸ் செங்கல். ஏன் என்றால் அங்கு செங்கல் தான் இருக்கிறது.

நாடாளுமன்றத்தில் 2015-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டு அதற்குப் பிறகு 2019-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டு இப்போது 2021-ஆம் ஆண்டில் இன்றைக்கு செங்கல் மட்டும் இருக்கிறது. அதையும் காணவில்லை என்கிறார்கள். எனவே எதையும் நிறைவேற்றவில்லை.

இன்றைக்கு பிரதமராக இருக்கும் மோடி 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன் மீனவர்களை காக்க கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சொன்னார்.

அந்த அடிப்படையில் 2014-இல் ஆட்சிக்கு வந்தவுடன் ஜூன் மாதம் 17-ஆம் தேதி ஒரு முறை இந்தியா - இலங்கை அமைச்சர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தினீர்கள். அதில் எந்த பலனும் கிடைக்கவில்லை. தொடர்ந்து 7 ஆண்டு காலமாக மீனவர்கள் தாக்கப்படும் கொடுமைகள் நடந்துகொண்டிருக்கிறது.

2015இல் – தாக்குதல், 2016இல் – தாக்குதல், 2017இல் - தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை, 2018இல் - பெட்ரோல் குண்டு வீசி தாக்கியதில் படகுகள் சேதம், 2020-இல் இலங்கை கடற்படை தாக்கியது மட்டுமல்ல, அதில் 28 பேர் கைது செய்யப்பட்டார்கள். அந்த தாக்குதல் நடந்த வீடியோ வெளியானது. 2021-ஆம் ஆண்டு ஜனவரி - மேவியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய 4 மீனவர்கள் படுகொலை.

எனவே நம்முடைய மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளை பறிப்பது என அராஜகங்கள் அளவில்லாமல் போய் கொண்டுதான் இருக்கிறது. அதில் நம்முடைய மீனவர்கள் சிக்கி இருக்கிறார்கள்.

பா.ஜ.க.வை பொறுத்தவரையில் அதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படுவதில்லை. அதேபோல இங்கிருக்கும் அடிமை அரசு கூனிக்குறுகி, அனைத்திற்கும் ஆமாம் சாமி போட்டுக்கொண்டிருக்கும் பழனிசாமி அரசு அதை பற்றி எதுவும் கவலைப்படுவதில்லை.

எனவே, இந்தத் தேர்தல் நேரத்தில் உறுதிமொழியாக நான் சொல்ல விரும்புவது, கழக ஆட்சியில் மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம் என்பதைத்தான்.

அதேபோல சிறுபான்மையினருக்கு தொடர்ந்து மத்திய அரசும் மாநில அரசும் என்னென்ன துரோகம் செய்து கொண்டிருக்கிறது என்பது தெரியும்.

உதாரணமாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை அவசர அவசரமாக கொண்டுவந்து நாடாளுமன்றத்தில் அதை ஆதரித்தார்கள். ஒன்றை மட்டும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

மாநிலங்களவையில் அது தோற்கும் சூழ்நிலையில் இருக்கிறது. ஆனால் அ.தி.மு.க. 11 ஓட்டு – பா.ம.க. 1 ஓட்டு. இந்த 2 பேரும் அந்தச் சட்டத்தை எதிர்த்து ஓட்டு போட்டிருந்தால் அந்த சிஏஏ சட்டம் நிறைவேறி இருக்காது.

ஆனால் இவர்கள் ஆதரித்து ஓட்டுப்போட்ட காரணத்தால் அந்த சிஏஏ சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இப்போது இந்த தேர்தல் அறிக்கையில் பழனிசாமி, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்ப்போம் என்று சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் ஆதரித்து ஓட்டுப் போட்டு பச்சை துரோகத்தைச் செய்திருக்கிறார்கள். இப்போது தேர்தலுக்காக, சிறுபான்மை மக்களை ஏமாற்றுவதற்காக இன்றைக்கு அறிவித்திருக்கிறார். இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த சட்டத்தின் மூலம் சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்தவர்களை உரிமை அற்றவர்களாக ஆக்குவதற்கான முயற்சியை பாஜக. செய்கிறது. அதற்கு அ.தி.மு.க. ஆட்சி தலையாட்டிக் கொண்டு இருக்கிறது.

இந்த சட்டத்தை தொடக்கத்திலிருந்து திராவிட முன்னேற்றக் கழகம் நாடாளுமன்றத்திலும் எதிர்த்து குரல் கொடுத்தோம். எதிர்த்து ஓட்டு போட்டோம். அதற்குப் பிறகு தமிழ்நாடு முழுவதும் மக்களிடத்தில் கையெழுத்து இயக்கத்தை நடத்தி 2 கோடி கையெழுத்துகளைப் பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தோம்.

அப்போது சட்டமன்றத்தில் முதலமைச்சர் பழனிசாமி, “இந்த சட்டத்தினால் சிறுபான்மை சமுதாயத்தைச் சார்ந்த மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை“ என்று பதில் சொன்னார்.

நான் அப்போதும், சிறுபான்மையினரும் ஈழத்தமிழர்களும் பாதிக்கப்படுவார்கள் என்பதை ஆதாரங்களோடு விளக்கிச் சொன்னேன். எனவே இப்போது நாடகத்தை நடத்திக் கொண்டிருக்கிறார். நிச்சயமாக இந்த நாடகத்தைத் தமிழ்நாட்டில் இருக்கும் மக்கள் நம்பத் தயாராக இல்லை. இந்தத் தேர்தலில் அவர்களுக்கு சரியான பாடத்தை வழங்குவார்கள் என்று உறுதியோடு தெரிவிக்க விரும்புகிறேன்.

அதேபோல விலைவாசி விண்ணை முட்டும் வகையில் விஷம் போல ஏறிக் கொண்டிருக்கிறது. அதற்கு முழு காரணம் பெட்ரோல் டீசல் விலை உயர்வு. மோடியோ அல்லது இங்கு இருக்கும் பழனிசாமியோ அதைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபடவில்லை.

அதனால் இன்றைக்கு காய்கறி விலை, மளிகை பொருட்களின் விலை உயர்ந்து விட்டது. மக்களுடைய அன்றாடத் தேவையான பொருட்களின் விலை உயர்ந்து நிற்கின்ற காரணத்தால் சேமிப்பு என்பதே இல்லாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது.

இதைப்பற்றி இந்த ஆட்சி கவலைப்படவில்லை. அவர்கள் கவலை எல்லாம் கொள்ளை அடிப்பது தான். கரப்ஷன் - கமிஷன் – கலெக்ஷன்.

எனவே இப்படிப்பட்ட ஆட்சியை ஒழிப்பதற்கு வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நீங்கள் எல்லாம் ஒட்டுமொத்தமாக ஒன்றுசேர்ந்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x