

எழுத்தாளர் பெருமாள் முருகனை விருது வழங்கி கவுரவிக்க வேண்டாம் என சமன்வய் பாஷா சம்மான் அமைப்புக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக கொங்குநாடு ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய மொழித் திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் எழுத்தாளர் பெருமாள் முருகனை விருது வழங்கி கவுரவிப்பதை தவிர்க்க வேண்டும். அவரது 'மாதொருபாகன்' நாவல் திருச்செங்கோடு அர்த்தனாரீஸ்வரர் கோயில் புனிதத்தை சிதைக்கும் வகையில் அமைந்திருந்தது. மேலும், மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாகவும் இருந்தது. தமிழ் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் அவர் புண்படுத்திவிட்டார். எனவே, அவருக்கு விருது வழங்க வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.
பெருமாள் முருகன் எழுதிய 'மாதொருபாகன்' நாவலுக்கு இந்திய மொழித் திருவிழாவை ஒட்டி வழங்கப்படும் ‘சமன்வய் பாஷா சம்மான்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் எழுத்தாளர் பெருமாள் முருகன். 1980-களில் சிறுகதைகள் மூலம் தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமுகமானார். அவரது முதல் நாவலான 'ஏறுவெயில்' பலரது கவனத்தை ஈர்த்தது. கூளமாதாரி, நிழல் முற்றம், மாதொருபாகன் உள்ளிட்ட 9 நாவல்களை எழுதியுள்ளார். அத்துடன் 4 சிறு கதைத் தொகுப்புகளும் 8 கட்டுரைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. இளமுருகு என்ற பெயரில் கவிதைகளையும் எழுதியுள்ளார்.
இவரது நாவலான 'மாதொருபாகன்' 2010-ல் வெளிவந்தது. அதன் ஆங்கில மொழியாக்கம் 2013-ம் ஆண்டு வெளியானது. இந்த நாவல் மத நம்பிக்கைகளை புண்படுத்துவதாக சர்ச்சை எழுந்தது.
இந்நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகனை விருது வழங்கி கவுரவிக்க வேண்டாம் என சமன்வய் பாஷா சம்மான் அமைப்புக்கு கொங்குநாடு ஜனநாயக கட்சி வலியுறுத்தியுள்ளது.