இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கை வெளியீடு: வீடு இல்லாதவர்களுக்கு 8 சென்ட் மனை, வேலையில்லா இளைஞருக்கு ரூ.7,000 நிவாரணம்

2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். உடன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர் சுப்பராயன்.படம் க.ஸ்ரீபரத்
2021 சட்டப்பேரவை தேர்தலுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையை சென்னையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு வெளியிட்டார். உடன், மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, மாநில துணைச் செயலாளர் வீரபாண்டியன், மாநில துணைச் செயலாளர் சுப்பராயன்.படம் க.ஸ்ரீபரத்
Updated on
2 min read

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை சென்னையில் நேற்று வெளியிடப்பட்டது. வீடு இல்லாதவர்களுக்கு 8 சென்ட்மனை, வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு ரூ.7 ஆயிரம் நிவாரணம் உட்பட பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த நிலையில், சென்னை தியாகராயநகரில் உள்ள பாலன் இல்லத்தில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லக்கண்ணு வெளியிட கட்சியின் மாநில துணைச் செயலாளர் சுப்பராயன் பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்ச்சியின் போது, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், மாநில செயற்குழு உறுப்பினர் நா.பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

தமிழ்நாட்டில், தாய்மொழி தமிழைகற்பிக்கும் மொழியாகவும், உயர் நீதிமன்றத்தில் வழக்காடும் மொழியாகவும், கோவில்களில் வழிபாட்டு மொழியாகவும் உறுதிப்படுத்த தளர்வில்லாத நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா மற்றும் பன்னாட்டு பள்ளிகளிலும் தமிழை பயிற்றுவிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து தொழில்களிலும், தொழிலாளர்களுக்கு மாதம் ரூ.21 ஆயிரம்குறைந்தபட்ச ஊதியமாக நிர்ணயிக்கப்படும். விவசாயிகளின் பொதுத்துறை வங்கிக் கடன், கூட்டுறவு வங்கி உள்ளிட்ட அனைத்துக் கடன்களும் ரத்து செய்யப்படும். வட்டியில்லாத விவசாயக் கடன்கள் வழங்கப்படும். தமிழகத்தில் விவசாயத்துக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும்.

வேலையில்லாத பட்டதாரி இளைஞர்களுக்கு மாதம் ரூ.7 ஆயிரம் வேலையில்லா கால நிவாரணம் வழங்கப்படும். அனைவருக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர்வழங்கப்படும். தமிழகத்தில் தேசிய கல்விக் கொள்கை 2020 செயற்படுத்தப்படாமல் முற்றிலும் நிராகரிக்கப்படும். மருத்துவம் உள்ளிட்ட எந்த உயர் கல்விக்கும் தேசிய தகுதி நுழைவுத் தேர்வு அவசியமானதல்ல எனும் முறைமையை தமிழ்நாட்டில் உருவாக்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும். குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள்பதிவேடு போன்றவை தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படாது. கணவரை இழந்தவர்கள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், திருமணமாகாமல் தனித்து வாழும் பெண்களுக்கு ஆண் பிள்ளைகள் இருந்தாலும் மாதம் ரூ.3 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படும். அரசு வங்கிகளில் சுயஉதவிக் குழு பெண்களுக்கு 4 சதவீத வட்டி விகிதத்தில் கடன் வழங்கப்படும்.

வசிப்பிடம் இல்லாத குடும்பங்களுக்கு தலா 8 சென்ட் மனை நிலம் கிடைக்கவும், அடிப்படை வசதிகள் கொண்ட வீடுகள் கட்ட ரூ.6 லட்சம் நிதியும் கிடைக்க நடைமுறைகள் எளிமையாக்கப்படும். அரசு நிலங்களில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு உரிய வகையில் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் தேர்தல் அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையே, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, மாநில துணைச் செயலாளர்கள் சுப்பராயன், மு.வீரபாண்டியன் ஆகியோர் கூறுகையில், ‘‘தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்தில் பாஜக பல்வேறு மறைமுக ஏற்பாடுகளை செய்துள்ளது. அதன்படி, தமிழகத்தில் வரும் தேர்தலில் பல்முனை போட்டிக்கு வழி வகுத்துள்ளது. மத்திய பாஜக ஆட்சியில் நாடு நெருக்கடியை சந்தித்து வருகிறது. விலைவாசி உயர்வு, பெட்ரோல், டீசல் விலை உயர்வுகளால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதிமுக அரசு மாநில உரிமைகளை பறிகொடுத்து வருகிறது. எனவே, பாஜக, அதிமுக கூட்டணியை முறியடித்து திமுக கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்’’என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in