

கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலுக்கான அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளனது. வன்னியர் இடஒதுக்கீடு பேச்சுவார்த்தை, கூட்டணி பேச்சுவார்த்தைக்கு வராத பாமக நிறுவனர் ராமதாஸ் தற்போது பிரச்சாரத்துக்கு வரத் தொடங்கியுள்ளார். கரோனா தொற்று தீவிரமாக இருப்பதால் காரின் உள்ளே இருந்தபடியே அவர் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இதுதொடர்பாக பாமக மூத்த நிர்வாகிகளிடம் கேட்டபோது, “ராமதாஸுக்கு 81 வயது ஆகிறது. அறுவைச் சிகிச்சை செய்து கொண்டுள்ளார். கரோனா தொற்று பரவல் இருப்பதால் அவர் மிகவும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். அதனால்தான் அவர் பேச்சுவார்த்தைக்கு வரவில்லை. தேர்தல் பிரச்சாரத்துக்கூட வரவேண்டாம் என்றுதான் கூறினோம். ஆனால், அவர் கேட்கவில்லை. காரில் இருந்தபடி பிரச்சாரம் செய்து வருகிறார். அவரது பேச்சை கேட்கள் மக்கள் அதிக அளவில் வருகின்றனர். கட்சியின் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் உள் ஒதுக்கீடு பெற்றது மிகப்பெரிய சாதனையாகும். 23 தொகுதிகளிலும் பாமக வெற்றி பெறும். மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும்” என்றனர்.