

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு இன்னும் 13 நாட்களே உள்ள நிலையில் முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
அதேநேரத்தில் தமிழகத்தில் கரோனா 2-வது அலை பரவிட்டதோ என்ற அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. சென்னையில் மீண்டும் கரோனாவால் பாதிப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக ஆயிரம் எண்ணிக்கையை தாண்டி பதிவாகிறது. மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசு மட்டுமல்லாமல் முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் அறிவுறுத்தி வருகிறார்கள்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக 9, 10, 11 வகுப்புகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக சுகாதாரத் துறை மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், காய்ச்சல் முகாம் நடத்துவது, கரோனா பரிசோதனை அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மக்கள் தங்கள் தொகுதி தேர்தல் பற்றி பேசுவதைவிட, கரோனா பரவும் அச்சுறுத்தல் தொடர்பாகவே அதிமாகப் பேசுகின்றனர்.
காலையில் நடைப்பயிற்சி செல்வோர், காய்கறி சந்தை, முடி திருத்தகம், பலசரக்கு கடை போன்ற பல்வேறு பொது இடங்களில் கரோனா மீண்டும் பரவுவதால் ஊரடங்கு போடப் போகிறார்கள் என்றே மக்கள் பேசி வருகின்றனர். தேர்தலுக்குப் பிறகு ஊரடங்கு அறிவிப்பு வெளிவரும் என்ற பேச்சே அதிகமாக இருக்கிறது.
இதனிடையே, 80 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு தபால் வாக்குகள் பதிவு செய்யும் வாய்ப்பு அளித்ததுபோல, தங்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும். இதற்கு விண்ணப்பிப்பதற்கான காலம் கடந்த 16-ம் தேதியே முடிவடைந்துவிட்டது. அதனால் நாங்களும் விண்ணப்பிக்க கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கரோனா பயத்தில் இருப்பவர்கள் கோருகின்றனர்.
இதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் விசாரித்தபோது, “80 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத் திறனாளிகள் உள்பட சுமார் 2 லட்சத்து 5 ஆயிரம் பேர் தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளனர். கரோனா பாதிக்கும் என அச்சப்படுபவர்கள் தபால் வாக்கு பதிவு செய்ய விண்ணப்பிக்க கால அவகாசம் அளிப்பது பற்றி தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.