Last Updated : 23 Mar, 2021 03:13 AM

 

Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

கரோனா பரவாமல் தடுக்க ஸ்டாலின் விழிப்புணர்வு பிரச்சாரம்: அரசியல் விமர்சகர்கள் வரவேற்பு

கரோனா தொற்று கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்இந்தியாவில் பரவத் தொடங்கியது. இதைக் கட்டுப்படுத்த,பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும், ஏராளமானோர் உடல்நலம் பாதிக்கப்பட்டனர்.

மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட தீவிர நடவடிக்கையின் காரணமாக, கரோனா தொற்றும் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. பின்னர், படிப்படியாக இயல்பு நிலை திரும்பியது. தற்போது, மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கி உள்ளது. இதனால், பொதுமக்கள் மீண்டும் பாதுகாப்பாக இருக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. ஆனால், பொதுமக்கள் அதற்குசெவிசாய்க்காமல் உள்ளனர்.

தமிழக சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்களில் ஆயிரக்கணக்கான கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் கூடுகின்றனர். இதனால், கரோனா தொற்று அதிக அளவில் பரவுவதற்கான வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் தனது தேர்தல் பிரச்சாரத்தின் போது, கட்சித் தொண்டர்களும், பொதுமக்களும் கண்டிப்பாக முகக் கவசம் அணிய வேண்டும் என கூறி வருகிறார். அம்பத்தூரில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது உரையாற்றிய ஸ்டாலின், ‘‘கரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஊசி போட்டுக் கொள்ளும் ஒருசிலருக்கு காய்ச்சல், உடல்வலி போன்றவை ஏற்படும். அதைக் கண்டு அஞ்ச வேண்டாம். ஓரிரு நாட்களில் சரியாகி விடும். அனைவரும் வெளியில் செல்லும் போது முகக்கவசம் அணிய வேண்டும். சுவர் இருந்தால்தான் சித்திரம் வரைய முடியும்’’ எனக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

இதுகுறித்து, அரசியல் விமர்சகர்கள் கருத்துத் தெரிவிக்கையில், ‘திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின் போது, தனது கட்சியின் கொள்கைகள், திட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளித்து பேசாமல், கட்சித் தொண்டர்கள், பொதுமக்களின் உடல் நலத்தில் அக்கறை கொண்டு கரோனா தொற்று குறித்து பேசி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது பாராட்டத்தக்கது.

அரசு எவ்வளவு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும், இதுபோன்று அரசியல் கட்சித் தலைவர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தினால், அது எளிதாக தொண்டர்கள் மத்தியில் சென்று அடையும்.

இதேபோல், சமூகநலனில் அக்கறைக் கொண்டு பிற அரசியல் கட்சித் தலைவர்களும் தங்கள் தேர்தல் பிரச்சாரத்தின் போது கரோனா தொற்று குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x