கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் சால்வை, பூங்கொத்தை தவிர்க்க வேண்டும்: கட்சியினருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்

கரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்தல் பிரச்சாரத்தில் சால்வை, பூங்கொத்தை தவிர்க்க வேண்டும்: கட்சியினருக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தல்
Updated on
1 min read

கரோனா இரண்டாவது அலை நெருங்குவதால், பொதுமக்கள் போதிய விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். கட்சியினர் சால்வை, பூங்கொத்துகள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும் என்று அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து கட்சியினருக்கு அவர் நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஜெயலலிதாவின் உண்மை யான ஆட்சியை நாம் அமைக்க வேண்டும் என்ற லட்சியத்தோடு, வெற்றி இலக்கை நோக்கிய உங்களின் பயணம் மனநிறைவைத் தருகிறது.

அதே நேரம், தமிழகத்தில் கடந்தமாதம் வரை ஓரளவு கட்டுக்குள் இருந்த கரோனா, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கடந்த சில தினங்களாக அதிவேகத்தில் பரவும் கரோனா, இரண்டாவது அலையாக உருவெடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தியிருப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த அபாயகரமான சூழலில் நாமும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டியது அவசியம்.

மக்களிடம் பிரச்சாரம் செய்யச் செல்லும்போதும், நான் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பிரச்சாரம் செய்ய வரும்போதும் போதிய சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும். முகக்கவசம் அணிவது உள்ளிட்ட பாதுகாப்பு நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். மிக முக்கியமாக, நான் பிரச்சார களத்துக்கு வரும்போது எனக்கு சால்வை அணிவிப்பது, பூங்கொத்து கொடுப்பது, பரிசுப் பொருட்கள் கொடுப்பது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

ஜனநாயகத்தை வலுப்படுத்த பொதுமக்கள் தேர்தல் நடைமுறைகளில் பங்கெடுப்பது அவசியம் என்றாலும், கரோனா பேரிடர் நம்மைவிட்டு முழுமையாக நீங்காத நிலையில், இரண்டாவது அலையாக நம்மை நெருங்கும் ஆபத்து உள்ள நிலையில், மிகுந்தவிழிப்புணர்வோடும், பாதுகாப்போடும் தேர்தல் களத்தை அணுக வேண்டும். தனிமனித பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு, தேர்தல் நடைமுறைகளில் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in