Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் அதிமுகவில் இணைந்தார்

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன், நேற்று தருமபுரியில் முதல்வர் பழனிசாமி முன்னிலையில் தன் ஆதரவாளர்களுடன் அதிமுகவில் இணைந்தார். உடன், உயர் கல்வி மற்றும் வேளாண் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர்.

தருமபுரி

திமுக முன்னாள் அமைச்சர் முல்லைவேந்தன் நேற்று முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் முல்லைவேந்தன். தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த தருமபுரி மாவட்டத்தின் திமுக செயலராக பணியாற்றியவர். தருமபுரி மாவட்டம் மொரப்பூர் சட்டப்பேரவை தொகுதியில் (மறுசீரமைப்பின்போது இந்த தொகுதி நீக்கப்பட்டது) போட்டியிட்டு 3 முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார்.

1996-ம் ஆண்டு பதவியேற்ற திமுக ஆட்சியின் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2014-ம்ஆண்டு மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர்கள் தோல்விக்குமாவட்ட செயலாளர்களிடம் திமுக தலைமை விளக்கம் கேட்டது. முல்லைவேந்தன் முறையான விளக்கம் அளிக்கவில்லை என காரணம் கூறி திமுக தலைமை அவரை கட்சியை விட்டு நீக்கியது. இதனால், 2016-ம் ஆண்டு அவர் தேமுதிக-வில் இணைந்தபோதும் தீவிர அரசியலில் ஈடுபடாமல் இருந்து வந்தார்.

முன்னாள் முதல்வரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதி உடல் நலம் பாதித்திருந்த நிலையில் நலம் விசாரிக்க நேரில் சென்றார். பின்னர் கருணாநிதி மறைவுக்கு பின்னர் ஸ்டாலின் திமுக தலைவர் ஆன பிறகு 2018-ம் ஆண்டு மீண்டும் திமுகவில் இணைந்தார்.

ஆனாலும், கட்சியில் தனக்கு போதிய முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என்ற வருத்தத்தில் இருந்து வந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து விலகி இருந்த முல்லைவேந்தன் நேற்று,பிரச்சார கூட்டங்களில் பங்கேற்கவந்த முதல்வர் பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x