

கோவையில் ஏடிஎம் இயந்திரங் களில் நிரப்புவதற்காக கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடி ரொக்கத்தை, உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் அலுவலர்கள் நேற்று பறிமுதல் செய்தனர்.
கோவை சிங்காநல்லூர் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட பறக்கும்படை அலுவலர்கள், தெற்கு வட்டாட்சியர் புனிதவதி தலைமையில், திருச்சி சாலை குளத்தேரி அருகே நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஏடிஎம் மையங்களுக்கு பணத்தை எடுத்துச்செல்லும் வாகனத்தை பறக்கும்படையினர் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது, அதில் ரூ.1 கோடியே 3 லட்சம் தொகை இருந்ததும், காந்திபுரத்தில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் இருந்து, வெவ்வேறு இடங்களில் உள்ள ஏடிஎம் மையங்களில் நிரப்ப எடுத்துச் சென்றதும் தெரியவந்தது.
பணத்தை கொண்டுவந்தவர் களிடம், வங்கிக் கிளையின் மேலாளர் கையெழுத்திட்டு அளித்த முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், தொகையைபறிமுதல் செய்த அதிகாரிகள், மாவட்டக் கருவூலத்தில் ஒப்படைத் தனர். வங்கி நிர்வாகத்தினர் உரிய ஆவணம் காட்டினால், பணம் திரும்ப ஒப்படைக்கப்படும் என பறக்கும்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இருவர் கைது
இதற்கிடையே, இந்த வாகனத்தில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலாளி சுப்பிரமணியம்(55) துப்பாக்கி வைத்திருந்தார்.
அவரிடம் துப்பாக்கிக்கான அனுமதி குறித்து விசாரித்தபோது, துப்பாக்கியின் உரிமையாளர் போத்தனூரைச் சேர்ந்த நாகலிங்கம்(48) என்பதும், அவரிடம் இருந்து ஒருநாள் பணிக்காக துப்பாக்கியை சுப்பிர மணியம் இரவலாக வாங்கி வந்து பயன்படுத்தியதும் தெரியவந்தது.
இதையடுத்து துப்பாக்கியை பறிமுதல் செய்த சிங்காநல்லூர் போலீஸார், சுப்பிரமணியம், நாகலிங்கம் ஆகியோர் மீது படைக்கலன் சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து, இருவரை யும் கைது செய்தனர்.