மக்கள் நீதி மய்யத்தில் காலில் விழும் கலாச்சாரம் கிடையாது: கோவை தேர்தல் பொதுக்கூட்டத்தில் கமல்ஹாசன் உறுதி

கோவை புலியகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். படங்கள்: ஜெ.மனோகரன்
கோவை புலியகுளம் பகுதியில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். படங்கள்: ஜெ.மனோகரன்
Updated on
1 min read

மக்கள் நீதி மய்யத்தில் காலில்விழும் கலாச்சாரமோ, கரைவேட்டியோ கிடையாது என்று அக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கூறினார்.

மக்கள் நீதி மய்யம் சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் கோவை புலியகுளத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியதாவது:

எதற்காக அரசியலுக்கு வந்தீர்கள் என்று கேட்கிறார்கள். இங்கு என்னெவெல்லாம் பாழ்பட்டுள் ளதோ, அவற்றைச் சீரமைக்கவே வந்துள்ளோம். மநீம வேட்பாளர்கள் பல்வேறு துறைகளில் சாதனை செய்தவர்கள். அரசியலுக்குச் சென்றால் பணம் சம்பாதிக்கலாம் எனக் கருதி வந்தவர்கள் அல்ல. அரசியலை கடமையாகக் கருதி வந்தவர்கள்.

பொது வெளியில் நாங்கள் போராட்டங்களில் ஈடுபடவில்லை என்கின்றனர். பேருந்துகளை உடைப்பதும், பேருந்துக்குள் ஆட்களை வைத்து எரிப்பதும் போராட்டங்கள் அல்ல. அவை குற்றமாகும்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராகவும், இடஒதுக்கீடு விவகாரத்திலும் அனைவருடனும் இணைந்து போராடியுள்ளோம். பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவியுள்ளோம்.

கிராமசபைக் கூட்டங்களை நாங்களே மீட்டெடுத்தோம். ஆனால், சிலர் அதை தாங்களே கண்டுபிடித்ததாக வேடம் போடுகின்றனர். அந்த வேடம் நிலைக்காது. மக்கள் நீதி மய்யத்தில் காலில் விழும் கலாச்சாரமோ, கரைவேட்டியோ கிடையாது. பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிப்பதில்லை.

கோடிக்கணக்கில் பணம் கொடுத்து வாய்ப்பு பெறுவோர், மீண்டும் அதை சம்பாதிக்கவே முயல்வார்கள். அவர்களை முதலில் அகற்ற வேண்டும். திமுக என்ற மிகப் பெரிய கட்சி உருவானது காலத்தின் கட்டாயம்.

தற்போது, அதை அகற்ற வேண்டியதும் காலத்தின் கட்டாயமாகும்.

தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு மோசமாக உள்ளது. காவல் துறையில் இருக்கும் பெண்களுக்கே பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. குற்றவாளிகள் தைரியமாக வெளியில் சுற்றிக் கொண்டுள்ளனர்.

இதற்கெல்லாம் தீர்வுகாண, லோக்ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வேண்டும். தமிழக மக்கள் எங்களுக்கு வெற்றியை அளி்த்தால், டெல்லி சென்று தமிழகத்துக்காக கர்ஜிப்பேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in