Published : 23 Mar 2021 03:13 AM
Last Updated : 23 Mar 2021 03:13 AM

மக்கள் விரோத சட்டங்களுக்கு துணைபோனது அதிமுக: திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. குற்றச்சாட்டு

கோவை கிணத்துக்கடவு தொகுதிதிமுக வேட்பாளர் குறிச்சி பிரபாகரனை ஆதரித்து சுந்தராபுரத் தில் நேற்று நடைபற்ற பிரச்சாரக் கூட்டத்தில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவா எம்.பி. பேசியதாவது:

மத்தியில் பாஜக ஆட்சிக்குவந்ததில் இருந்து விவசாயிகள், மாணவர்கள், ஏழை, எளியமக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் சட்டங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன.

மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு துணைபோனது அதிமுக அரசு. 100 நாட்களுக்கும் மேலாக டெல்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது. அதற்கு ஆதரவாக வாக்களித்த கட்சி அதிமுக. பேசவேண்டிய இடத்தில் பேசாமல், தேர்தல் நேரத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதாக அதிமுக சொல்கிறது. கல்விக்காக கடன் வாங்கி ஏழை மாணவர்கள் படிக்கின்றனர்.

படித்து முடித்தபின் வேலைகிடைக்காமல் அந்த கடனை திருப்பிச் செலுத்தமுடிய வில்லையெனில் வாராக்கடன் பட்டியலில் சேர்க்கின்றனர். விஜய் மல்லையா ரூ.7 ஆயிரம் கோடி கடன் வாங்கிவிட்டு லண்டனில் சுதந்திரமாக திரிகிறார். ரூ.4 லட்சம் கடன் வாங்கிய மாணவன் அவமானப்பட்டு நிற்கிறான். எனவேதான், கல்விக் கடன் ரத்து செய்யப்படும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதிமுக ஆட்சியில் நல்லது எதுவும் செய்யவில்லை. மக்களின் பணத்தை கொள்ளையடித்து தங்களுடையதாக்கிக்கொண்டனர். வளர்ச்சி என்பதே தமிழகத்தில் இல்லாமல் போனது. எனவே, நியாயத்தின் அடிப்படையில் மக்கள் வாக்களிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x