

சென்னையில் நேற்று பெய்த கனமழையால் பல்வேறு இடங் களிலும் தண்ணீர் தேங்கியது. தண்டவாளங்களில் மரங்கள் விழுந்தன. இதனால் பஸ், ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. சென்னை யில் வசிக்கும் மக்கள், பண்டி கையை சொந்த ஊரில் கொண்டா டுவதற்காக கடந்த 4 நாட்களாக சிறப்பு பஸ்கள், ரயில்களில் சென்ற வண்ணம் இருந்தனர். இதனால் பஸ், ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த 3 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்துவந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம்போல தேங்கியது.
கனமழையால் பஸ் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கோயம்பேடு, பிராட்வே, வடபழனி, அடையாறு, வியாசர்பாடி, தி.நகர், திருவான் மியூர், வேளச்சேரி, தாம்பரம், மாதவரம், எண்ணூர், திருவொற்றி யூர் உட்பட பெரும்பாலான மாநகர பஸ் நிலையங்கள், பணிமனைகளில் மழைநீர் தேங்கியது. சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்கள் முன்பும் மழைநீர் தேங்கியதால் பயணிகள் அவதிப்பட்டனர். நிழற்குடைகள் இல்லாததால், பொதுமக்கள் மழையில் நனைந்தனர்.
வாகன அணிவகுப்பு
திருவொற்றியூர் நெடுஞ்சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, அண்ணா சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, கிண்டி முதல் பூந்தமல்லி வரையிலான சாலை களில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் நீண்ட தூரத்துக்கு அணிவகுத்து நின்றன.
ரயில் சேவை பாதிப்பு
கனமழையால் ரயில் தண்டவாளங்களிலும் தண்ணீர் தேங்கி நின்றது. இதனால், தென்மாவட்டங்களில் இருந்து வந்த விரைவு ரயில்கள் தாம்பரம் அருகில் நிறுத்தப்பட்டன. பல்லாவரம் அருகே தண்டவாளத்தில் மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால், ரயில்களை இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது.
மின்ரயில் சேவை
தென்மாவட்டங்களில் இருந்து வந்த பெரும்பாலான விரைவு ரயில்கள் சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக எழும்பூரை வந்தடைந்தன. திருமால்பூர், செங்கல்பட்டு தாம்பரம் - கடற்கரை மின்சார ரயில் சேவை 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது. தண்டவாளத்தில் விழுந்த மரங்கள் அகற்றப்பட்ட பிறகு, மின்சார ரயில்கள் மெதுவாக இயக்கப்பட்டன. தாம்பரம், பல்லாவரம், கிண்டி, மாம்பலம், பரங்கிமலை, சைதாப்பேட்டை, எழும்பூர் உள்ளிட்ட அனைத்து மின்சார ரயில் நிலையங்களிலும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட நேரம் காத்து நின்றனர்.
இதேபோல சென்ட்ரல் - பேசின்பிரிட்ஜ் இடையே விரைவு ரயில் பாதையில் மரம் விழுந்தது. சில இடங்களில் தண்ட வாளங்கள் மழைநீரில் மூழ்கின. இதனால், சென்ட்ரலில் இருந்து புறப்பட வேண்டிய விரைவு ரயில்கள் ஒன்றரை முதல் 2 மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டுச் சென்றன. கும்மிடிப்பூண்டி, அரக்கோணம், ஆவடி - சென்ட்ரல் இடையே மின் ரயில் சேவையும் சுமார் 2 மணி நேரம் பாதிக்கப்பட்டது.
1,194 சிறப்பு பஸ்கள்
தீபாவளி நெரிசலை தவிர்க்கவும், பயணிகளின் வசதிக்காகவும் கோயம்பேட்டில் இருந்து பல்வேறு இடங்களுக்கு நேற்று 1,194 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. மழை காரணமாக கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் சிறப்பு பஸ்களை கொண்டு வந்து இயக்குவதில் சிரமம் ஏற்பட்டது. முன்பதிவு செய்த பயணிகள் ஒரு மணி நேரத்துக்கு பிறகே தங்களுக்கான பஸ்களில் சென்றனர். மாலையில் திடீரென மக்கள் கூட்டம் அதிகரித்ததால் சாலைகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. புறநகர் பகுதிகளுக்கு செல்ல வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.