Published : 23 Mar 2021 03:14 AM
Last Updated : 23 Mar 2021 03:14 AM

ஊடகங்களில் அரசியல் விளம்பரம் வெளியிட கட்டுப்பாடு - மாவட்ட தேர்தல் அலுவலகத்தின் முன் அனுமதி கட்டாயம் என அறிவிப்பு

ஊடகங்களில் அரசியல் விளம்பரம் வெளியிட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. முன் அனுமதி பெறாத தேர்தல் விளம்பரங்களை ஊடகங்களில் வெளியிடக் கூடாது என்று சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரி கோ.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சட்டப்பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சியினர், வேட்பாளர்களின் விளம்பரங்களுக்கு அனுமதி வழங்கவும், நாளிதழ்கள், தொலைக்காட்சி, வானொலி, சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் தேர்தல் குறித்த செய்திகள், விதிமீறல்களை கண்டறியவும் மாவட்ட தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் அவரது தலைமையில் ஊடகச் சான்று மற்றும் கண்காணிப்பு குழு (Media Certification and Monitoring Committee) அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.

இக்குழு உறுப்பினர்கள் மூலம் வழங்கப்பட்ட சான்று எண்ணுடன் கூடிய தேர்தல் விளம்பரங்களை மட்டுமே ஊடகங்கள் வெளியிட வேண்டும்.

இக்குழுவின் அனுமதி இல்லாத தேர்தல் விளம்பரங்களை நாளிதழ்கள், வானொலி, தொலைக்காட்சி நிறுவனங்கள் எக்காரணம் கொண்டும் வெளியிடவோ, ஒளிபரப்பவோ கூடாது.

3 நாட்களுக்கு முன்பாக

இக்குழுவிடம் அனுமதி பெற அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர், போட்டியிடும் வேட்பாளர்கள் 3 நாட்களுக்கு முன்பாகவும், பிற அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் 7 நாட்களுக்கு முன்பாகவும் விண்ணப்பிக்க வேண்டும். தேர்தல் குறித்த விளம்பரங்கள், செய்திகளை வெளியிட அனுமதிகோரி நாளிதழ்கள், தொலைக்காட்சியினர் நேரடியாக விண்ணப்பிக்கக் கூடாது.

தனிப்பட்ட பிற நபர்கள், கட்சிகள், பிற வேட்பாளர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை விமர்சிக்கும் வகையிலோ, இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ, சாதி, மத, இனரீதியாக வன்முறையை தூண்டும் விதமாகவோ இந்த விளம்பரங்கள் இருக்கக் கூடாது.

விளம்பரக் கட்டணம்

விளம்பரம் தயாரிக்க செலவிடப்பட்ட கட்டணத்துடன், அதன் அளவு, எண்ணிக்கை உட்பட இதர வகை செலவினப் பட்டியலுடன் விண்ணப்பிக்க வேண்டும். அரசு நிர்ணயித்தபடி, விளம்பரத்துக்கான கட்டணம் கணக்கிடப்படும்.

அனுமதி கோரும் விண்ணப்பத்துடன் விளம்பர வடிவமைப்பு, வீடியோ ஆகியவற்றை இணைக்க வேண்டும். விளம்பரங்களில் இடம்பெற வேண்டிய வாசகங்கள், காட்சிகள், பாடல் வரிகளை அச்சு வடிவில் விண்ணப்பத்துடன் வழங்க வேண்டும். விண்ணப்பங்களை நேரிலோ, பெருநகர சென்னை மாநகராட்சி இணையதளத்திலோ (www.chennaicorporation.gov.in) பெற்றுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட சில வேட்பாளர்கள் குறிப்பிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்வதாக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் வெளியிடப்படும் செய்திகள், சமூகத்தில் ஆதரவு பெற்றுள்ள குறிப்பிட்ட வேட்பாளர்தான் தொகுதியில் வெற்றி பெறுவார் என்பது போல வரும் செய்திகள், ஒரே வேட்பாளரின் வெற்றி வாய்ப்பை பெரிதாக கூறி மீண்டும் மீண்டும் பேசுவது போன்ற செய்திகள் ஆகியவை பணம் கொடுத்து வெளியிடப்படும் செய்திகளாக (Paid News) கருதப்படும்.

பணம் கொடுத்து வெளியிடப்படுவதாக இக்குழுவால் இனம் காணப்படும் அனைத்து செய்திகளையும் சம்பந்தப்பட்ட வேட்பாளரின் செலவினக் கணக்கில் சேர்க்குமாறு தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு தெரிவிக்கப்படும். வேட்பாளர்கள், கட்சிகள் தொடர்பாக சமூக ஊடகங்களில் ஒளிபரப்பப்படும் தகவல்கள், பிரச்சாரங்கள் ஆகியவை வேட்பாளர்களின் தேர்தல் கணக்கில் சேர்க்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x