

மாதவரத்தில் பெண்ணை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடித்த கணவன், மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு தணிகாசலம் நகரைச் சேர்ந்தவர் ரவி. இவர் சவுகார்பேட்டையில் பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இவருடைய மனைவி கலைவாணி. இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கிறார். புனேவில் பணிபுரிந்து வருகிறார்.
இந்த நிலையில் கலைவாணி வீட்டுக்கு ராகேஷ் என்பவர் பெயின்டிங் வேலைக்கு வந்துள்ளார். அப்போது, கலைவாணியிடம் தான் கரோனா ஊரடங்கால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தனக்கு ஒரு வேலை கொடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் பரிதாபமாக கேட்டுள்ளார்.
இதனால், அவரை வீட்டு காவலாளி வேலைக்கு வைத்துள்ளார். தொடர்ந்து, தன் மனைவி ரேவதியையும் அழைத்து வந்து கலைவாணி வீட்டில் பணிப்பெண் வேலைக்கு ராகேஷ் சேர்த்துள்ளார்.
கணவன், மனைவி இருவரும் கலைவாணி வீட்டிலேயே தங்கியுள்ளனர். இந்த நிலையில், கலைவாணியிடத்தில் அதிகளவில் நகைகள் இருப்பதை ராகேஷும் ரேவதியும் தெரிந்து கொண்டனர்.
கடந்த 20-ம் தேதி கலைவாணியை இருவரும் சேர்ந்து கை, கால்களை கட்டிப்போட்டு இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்துள்ளனர்.
பின்னர், வீட்டில் இருந்த 15 பவுன் நகை, ரூ.10 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து விட்டு ஆட்டோவில் தப்பிச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின்பேரில் மாதவரம் பால்பண்ணை போலீஸார் தனிப்படை அமைத்து தம்பதியை தேடி வந்தனர். அவர்கள் பெங்களூருவில் இருப்பதாக தகவல் கிடைத்தது.
உடனடியாக, அங்கு சென்ற போலீஸார், கே.ஆர்.புரத்தில் பதுங்கியிருந்த இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை செய்து வருகின்றனர்.
‘வீட்டு வேலைக்கு மற்றும் காவலாளி வேலைக்கு யாரை சேர்த்தாலும் காவல்துறையிடம் தகவல் கூற வேண்டும்.
ஆதார் கார்டு, வாக்காளர் அட்டையின் நகல்களை வாங்கி காவல் நிலையத்தில் ஒப்படைக்க வேண்டும்.
அப்போதுதான், எங்களால் தகுந்த பாதுகாப்பு கொடுக்கவோ அல்லது உடனடியாக உதவிக்கு வரவோ முடியும்’ என போலீஸார் தெரிவித்துள்ளனர்.