

திருச்சி மாவட்டம் லால்குடி தொகுதியில் மக்கள் நீதி மய்ய கூட்டணியில் உள்ள சமத்துவ மக்கள் கட்சியைச் சேர்ந்த முரளி கிருஷ்ணன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில், அவர் நேற்று திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேருவைச் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். மேலும் வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.
அப்போது லால்குடி தொகுதி திமுக வேட்பாளர் சவுந்தரபாண்டியன், மத்திய மாவட்ட பொறுப்பாளர் க.வைரமணி, மாநகரச் செயலாளர் மு.அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ அன்பில் பெரியசாமி, ஒன்றியச் செயலா ளர் கதிர்வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருச்சி மாவட்டத்தில் மக்கள் நீதி மய்ய கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று திருச்சியில் பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், அதன் கூட்டணி கட்சி வேட்பாளர் திமுகவில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.