

ஒரு ஊழலுக்கு மாற்று, இன்னொரு ஊழல் ஆகாது என்பதால் அதிமுக, திமுகவை அகற்ற வேண்டும் என மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சதாசிவம், பேராவூரணி தொகுதி ஐஜேகே வேட்பாளர் பச்சமுத்து, திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளர் அன்பானந்தம் ஆகியோரை ஆதரித்து, தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் பேசியது:
எங்கள் கட்சியின் வேட்பாளர்களாக இருப்பவர்கள் ஓரளவுக்கு பணம், புகழ் சம்பாதித்துவிட்டு, சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளனர். நானே இதற்கு முன்னுதாரணம். 60 ஆண்டுகள் வரை என்னைத் தோளில் தூக்கிப் பிடித்தது தமிழ் மக்கள். அதற்குக் கைமாறு செய்யவே அரசியலுக்கு வந்தேன்.
மக்கள் நீதி மய்ய எம்எல்ஏக்கள் மக்களுக்குச் சேவை செய்யவில்லை எனத் தெரிந்தால், நானே விரட்டிவிடுவேன். அவர்கள் மீது குற்றச்சாட்டுகள் வந்தால் கட்சி, பதவியை விட்டு நீக்கிவிடுவேன்.
50 ஆண்டுகளாக நீங்கள் மாறி, மாறி அனுபவித்த கொடுமைகளிலிருந்து மீண்டு வர ஏப்.6-ம் தேதி ஒரு வாய்ப்பு உள்ளது. இளைஞர்களும், பெண்களும், அறிவார்ந்த வாக்காளர்களும் எங்களை ஆதரிக்கின்றனர். தமிழகமும், உங்கள் மரியாதையும், உங்கள் வாக்கும், உங்கள் சந்ததிகளின் எதிர்காலமும் விற்பனைக்கு அல்ல. ஆட்சியாளர்கள் செய்து கொடுக்கும் வசதிகள் உங்களுக்குச் சேர வேண்டிய சேவை, உரிமை. அந்தச் சேவையை வழங்கும் முதல் கட்சியாகத் தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் இருக்கும் என்றார்.
பின்னர், நாகை மாவட்டம் கீழையூர் திருப்பூண்டி கடைத்தெருவில், மக்கள் நீதி மய்ய வேட்பாளர்கள் சையது அனாஸ்(நாகை), டாக்டர் ஜி.சித்து(கீழ்வேளூர்) ஆகியோரை ஆதரித்து, கமல்ஹாசன் பேசியது:
கஜா புயலின்போது இங்கு வந்திருக்கிறேன். மீனவ கிராமங்களில் புறவழிச்சாலைகள் இல்லை. சிற்றூர்களுக்கு ரயில் சேவை இல்லை. தமிழகம் முழுவதும் மூடப்பட்ட சாக்கடைகள் இல்லை. எம்எல்ஏக்களுக்கு கொடுப்படுகின்ற பணம், இவற்றை சீரமைப்பதற்கே போதாது. அந்தப் பணத்தையும் அவர்கள் பாக்கெட்டில் போட்டுக்கொண்டால் எந்த வேலையும் நடைபெறாது. அப்படி செய்யாமல் இருக்க நேர்மையானவர்களை தேர்தலில் நிறுத்த வேண்டும். அவர்கள் நேர்மையாக இல்லாவிட்டால், தட்டிக்கேட்கும் தலைமை வேண்டும்.
எங்கள் ஆட்சிக் காலத்தில் 5 லட்சம் இளைஞர்களுக்கு, அவர்கள் குடியிருக்கும் இடத்திலிருந்து 100 கி.மீ தொலைவுக்குள் வேலை வழங்கப்படும்.
கோயில், மசூதியை இடித்தால்தான் உங்களுக்கு கோபம் வருகிறது. மணலை கொள்ளை அடித்தால், மலையை உடைத்தால் கோபம் வருவதில்லை. எனக்கு சாதி, மதம் கிடையாது. எனக்கு சாதி இல்லை என்று நான் சொல்வதற்கு பெரியார் மட்டும் காரணம் இல்லை. என் வீட்டிலும் ஒரு பெரியார் இருந்தார். அவர் என் தந்தை சீனிவாசன். அதுபோல, நம் பிள்ளைகளையும் நாம் தயார் செய்ய வேண்டும் என்றார்.
பின்னர், வேட்பாளர்கள் சுந்தரமோகன் (தஞ்சாவூர்), ரெங்க சாமி (ஒரத்தநாடு), திருமாறன் (திருவையாறு) ஆகியோரை ஆதரித்து, தஞ்சாவூரில் அவர் பிரச்சாரம் செய்தார்.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதியின் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் எம்.முருகானந்தத்தை ஆதரித்து அக்கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் நேற்று கல்கண்டார்கோட்டை பகுதியில் பேசியதாவது:
இந்தப் பகுதியில் உள்ள அரியமங்கலம் குப்பை கிடங்கில் இருந்து 40 ஆண்டுகளாக குப்பையை அகற்றாமல் வைத்துள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் இதற்கு உரிய தீர்வு காண்போம்.
தமிழகத்தில் அதிமுக, திமுக என 2 கட்சிகளும் மாறி, மாறி ஆட்சி செய்து, 50 ஆண்டுகளை கழித்துவிட்டனர். தங்களின் 7 சந்ததிக்குத் தேவையான சொத்துகளை சேர்த்துவிட்டனர். ஆனால் மக்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
ஆளும், ஆண்ட கட்சிகளுக்கு பலமுறை வாய்ப்பு கொடுத்தும், இன்னும் ஊழலில் திளைக்கின்றனர். இந்த சுய நலவாதிகளை அகற்ற வேண்டும். ஒரு ஊழலுக்கு மாற்று, இன்னொரு ஊழல் ஆகாது. எனவே எங்களை மக்கள் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.