Published : 27 Nov 2015 10:43 AM
Last Updated : 27 Nov 2015 10:43 AM

தை பொங்கலுக்கான மண் பானைகள் தயாரிப்பு பணி முன்னதாகவே தொடங்கின: தொடர் மழை இடராகிவிடுமோ என்ற அச்சம்

தொடர் மழை மண்பாண்டத் தொழிலுக்கு இடராகிவிடுமோ என்ற அச்சத்தில், தைப் பொங்கலுக்குத் தேவையான மண் பானைகளை தயாரிக்கும் பணிகளை முன்கூட் டியே தொடங்கி உள்ளனர் சிவகங்கை மாவட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள்.

புரட்டாசி, ஐப்பசியில் விதை விதைத்து, தை மாதத்தில் அறுவடை செய்யும் தைப் பொங்கலை மிகவும் சிறப்பாகக் கொண்டாடுவது தமிழர்களின் பாரம்பரியம். தமிழர் திருவிழாவான தைப்பொங்கல் தினத்தன்று விவசாயத்துக்கு உறு துணையாக இருக்கும் கதிரவனுக் கும், காளைகளுக்கும் நன்றி செலுத் தும் வகையில், பொங்கல் வைத்து வழிபடுவது மரபு. இதற்காக மண் வாசனையுடன் கொண்டாடும் நோக்கில், புது மண் பானைகளில் பொங்கல் வைப்பது தொடர்கிறது.

பொங்கல் விழாவுக்குத் தேவை யான பானைகள் உற்பத்தியில், மண்பாண்டத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு தென் மாவட்டங்களில் குறிப்பாக, சிவகங்கை மாவட்டத்தில் எதிர் பார்த்த அளவுக்கு மழைப் பொழிவு இல்லை. சாரல் மழையாகவே பெய்து பூமி குளிர்ந்துள்ளது. இப்படி பெய்த மழை மண்பாண்டத் தொழிலாளர்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கார்த்திகை மாதத்தில் விளக்குகள் தயாரிப்பு பணி முடங்கி வருவாய் குறைந்துள்ளது.

அதனை ஈடுகட்டும் வகை யில், தைப் பொங்கலுக்குத் தேவையான மண் பானைகள் தயாரிப்பை முன் கூட்டியே தயாரிக்க தொடங்கி உள்ளனர் தொழிலாளர்கள். சிவ கங்கை மாவட்டம் மானாமதுரை, பூவந்தி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மண் பானைகளை தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.

இதுகுறித்து பூவந்தியைச் சேர்ந்த மண்பாண்டத் தொழிலாளர் ஜெயேந்திரன் கூறியதாவது: கார்த் திகை மாதத்தில் கருத்த இடத்தில் மழை பொழியும் என்பார்கள். வடகிழக்குப் பருவமழையும் சரியாக பெய்துள்ளதால் மண் பானை உற்பத்திக்குத் தேவையான சவடுமண், வண்டல், செம்மண் கிடைப்பதில் தட்டுப்பாடு நிலவு கிறது. இருப்பில் உள்ள மண்ணை வைத்து மண்பானைகள் தயாரிக் கிறோம்.

வெயில் அடிக்காததால் காய வைப்பதில் சுணக்கம் ஏற்பட்டுள் ளது. தொடர்ந்து மழை பெய்தால் உற்பத்தி பாதிக்கும் என்பதால், முன்கூட்டியே தயாரிப்பில் இறங்கி யுள்ளோம். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு நல்ல விளைச்சல் இருக்கும் என்பதால், கிராமங்களில் தைப் பொங்கலை சிறப்பாகக் கொண்டாடுவர்.

அதற்காக, மண்பானைகளை இப்போதிருந்தே தயாரிக்கத் தொடங்கி உள்ளோம். மழைக்கு இடையே உற்பத்தி செய்துவைத்து, மார்கழி மாதத்தில் சூளை வைத்து சுட்டு வெளியூர்களுக்கு அனுப்ப உள்ளோம். இதில், கால்படி அரிசி பானை, அரைப்படி, முக்கால்படி, ஒரு படி அரிசி பானை என ரகம் வாரியாக பானைகளைத் தயாரிக்கிறோம்.

இவற்றை ரூ.18 முதல் ரூ.65 வரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வோம். வியாபாரிகள் போக்கு வரத்து செலவு, சேதாரம், ஆதாயம் சேர்த்து கொஞ்சம் கூடுதலாக விலை வைத்து விற்பர். இந்த ஆண்டு வெளி மாவட்டங்களில் இருந்து நிறைய வியாபாரிகள் ஆர்டர் கொடுத்துள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x