

திருச்சி மாவட்டத்தில் போட்டியிடும் அமமுக வேட்பாளர்கள் ஆர்.மனோகரன் (திருச்சி கிழக்கு), சாருபாலா ஆர்.தொண்டைமான் (ஸ்ரீரங்கம்), எம்.ராஜசேகரன் (மண்ணச்சநல்லூர்) உள்ளிட்டோரை ஆதரித்து ஜீயபுரம், முசிறி கைக்காட்டி, சமயபுரம் டோல்கேட், ஸ்ரீ ரங்கம் ராஜகோபுரம், சிந்தாமணி அண்ணா சிலை, காந்தி மார்க்கெட், எடத்தெரு அண்ணா சிலை, பீமநகர் செடல் மாரியம்மன் கோயில் ஆகிய பகுதிகளில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று பிரச்சாரம் செய்தார்.
அப்போது அவர் பேசியது: பதவியில் உட்கார வைத்தவருக்கே துரோகம் இழைத்தவர் முதல்வர் பழனிசாமி. துரோகத்தை யார் செய்தாலும் தமிழக மக்கள் ஏற்கமாட்டார்கள்.
பணத்தைக் கொடுத்து வாக்குகளை வாங்கி விடலாம் என்று பண மூட்டைகளை நம்பி தற்போது தேர்தலில் போட்டியிடுகின்றனர். அதிமுகவின் ஊழல், முறைகேடுகள் வெளியே வரும் காலம் வந்துவிட்டது. இதேபோல, 10 ஆண்டுகள் ஆட்சியில் இல்லாத திமுக எப்படியாவது ஆட்சிக்கு வந்துவிட வேண்டும் என்று துடித்துக் கொண்டு உள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் அவர்களது குடும்பத்துக்கு மட்டுமே பலன் கிடைக்கும் என்றார்.
முன்னதாக கரூர் மாவட்டம் குளித்தலை காந்தி சிலை அருகே குளித்தலை தொகுதி அமமுக வேட்பாளர் நிரோஷா, கிருஷ்ணராயபுரம் (தனி) தொகுதி தேமுதிக வேட்பாளர் கதிர்வேல் ஆகியோரை ஆதரித்து பேசினார்.
அப்போது, திமுக ஆட்சிக்கு வந்தால் நாட்டுக்கு நல்லதல்ல. தமிழகத்தின் கஜானாவை கொள்ளையடித்துக் கொண்டிருப்பது பழனிசாமி ஆட்சி. எனவே, திமுக, அதிமுக இரு கட்சிகளையும் மக்கள் புறக்கணிக்க வேண்டும். தமிழகத்தின் வளர்ச்சிக்காக அமமுகவை ஆதரிக்கவேண்டும் என்றார்.