

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குச்சாவடி முகவர்கள் பணி யில் பாஜக தீவிர கவனம் செலுத்தி வருகிறது.
தேர்தல் களத்தில், வாக்குச் சாவடி முகவர்கள் பணி முக்கியத் துவம் பெற்றது. வாக்குச்சாவடி முகவர்களாக பணி செய்வதில், திமுகவினர் முன்னணியில் உள்ள னர். அவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழகத்தில், 20 தொகுதிகளில் போட்டியிடும் பாஜக, கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இது குறித்து பாஜக பிரமுகர்கள் கூறும்போது, “தேர்தலில், வாக்குச்சாவடி முகவர்கள் பணி முக்கியத்துவம் பெற்றது. இதனை உணர்ந்துதான், வாக்குச்சாவடி முகவர்கள் நியமனம் மற்றும் பயிற்சி ஆகியவற்றில், கடந்த 2 ஆண்டுகளாக தீவிர கவனம் செலுத்தினோம். 234 தொகுதிகளில், எங்களுக்கு பலம் வாய்ந்த தொகுதிகளை கண்டறிந்து, பணிகள் முடுக்கிவிடப்பட்டன. மேலும், பிற தொகுதிகளிலும் தேவைக்கு ஏற்ப, பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
முகவர்கள் பணி முக்கியமானது
வாக்குப்பதிவு தொடங்கியது முதல் முடியும் வரை என்று இல்லாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்துக்கு ‘சீல்' வைத்து ஒப்படைக்கும் வரை, வாக்குச்சாவடியில் முகவர்கள் இருக்க வேண்டும். செல்வாக்கு உள்ள வேட்பாளர்களால் பல இடங்களில், வாக்குச்சாவடி முகவர்கள் வெளியேற்றப்பட்டுள் ளனர். பின்னர், வாக்குச்சாவடியை அவரது ஆதரவாளர்கள், தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.
வாக்குச்சாவடி பணியில் உள்ள அதிகாரிகளால், எது வும் செய்ய முடியாது. இதனால், முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம்.
வாக்குப்பதிவு எண்ணும் இடங்களிலும் முகவர்கள் பணி முக்கிய மானது. தபால் வாக்குகளை எண்ணும்போது கவனமாக இருக்க வேண்டும். மேலும், மின்னணு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை சரியாக கணக்கிட வேண்டும். வாக்குச்சாவடி மற்றும் வாக்கு எண்ணும் இடத்தில் கூட்டணி கட்சிகளை முழுமையாக நம்ப முடியாது. அதனால்தான், எங்களுக்கான கட்டமைப்பை ஏற்படுத்தி உள் ளோம். வாக்குச்சாவடியில் உட்கார கூட ஆட்கள் கிடையாது என, எங்களை விமர்சித்த காலம் உண்டு. அந்த நிலையை மாற்றி அமைத்துள்ளோம்.
நாங்கள் போட்டியிடும் 20 தொகுதிகளிலும் தயார் நிலையில் இருக்கிறோம். பிற தொகுதிகளில் கூட்டணி கட்சிக்கு உதவவும் காத்திருக்கிறோம். இந்த தேர்தலில் எங்களது பணி சிறப்பாக இருக்கும்” என்றனர்.